வியாழன், 5 மே, 2011

“ பிரபாகரனுக்கும் பின்லேடனுக்கும் வேறுபாடு இல்லை” – இப்படிச் சொல்கிறார் பிளேக்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களின் உண்மைத்தன்மையை வாக்குறுதிகள் மூலமன்றி, தெளிவான தீர்மானங்களின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான பயணத்தின் முடிவில் நேற்றுமாலை கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்கா அரசுக்கு அமெரிக்காவிடம் இருந்து தனிப்பட்ட செய்தியை நான் கொண்டு வந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

அதுபோலவே, சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்கா துணை போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் தவறானது. அமெரிக்காவுக்கு அத்தகைய எண்ணமோ- தேவையோ கிடையாது.

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கை நிரந்த அரசியல்தீர்வை வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவில் நிலையான ஒற்றுமை மற்றும் ஜனநாயகத்தின் மூலம் அரசியல்தீர்வை ஏற்படுத்த இந்த அறிக்கை உதவியாக இருக்கும்.

நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக ஐ.நா பொதுசெயலருடன் சிறிலங்காவின் வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விரைவில் தொடர்பை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.

மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறுதலை உறுதிப்படுத்த, சுதந்திரமான மற்றும் நம்பகத்தன்மை வாயந்த பொறிமுறையொன்றை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், ஒசாமா பின்லேடனும் உலகில் மிக மோசமான பயங்கரவாதிகள் என்று வரலாற்றில் இடம்பெறுவார்கள்.

ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் நேரடி இலக்காக இருந்தார். அவரை கைதுசெய்வதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தோம். அல்கெய்டா இயக்கத்துடனான எமது போராட்டத்தில் பின்லேடனின் இறப்பு முக்கியமானதொரு வெற்றி.

அதேபோல, சிறிலங்காவில் பல்லாயிரக்காணக்கானவர்களின் உயிர்கள் பலியாவதற்கு பிரபாகரன் காரணமாக இருந்தார்.

சிறிலங்கா அரசுடன் இணைந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா பிரகடனப்படுத்தியதுடன் அந்த அமைப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கு இப்போதும் ஆதரவளித்து வருகிறது.

உலகில் மிக மோசமான பயங்கரவாத தலைவர்களில் ஒருவராக பிரபாகரன் இருந்தார்.

வட மாகாண புனர்நிர்மாண நடவடிக்கைளில் இன்னும் அதிகம் செயற்பட வேண்டியுள்ளது. அங்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் சாதகமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மையாக செயற்படுவதுடன் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் செய்த தவறுகளுக்கான பரிகாரங்களை பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழ் மக்களின் அனைத்து முக்கிய பிரச்சினைகளையும் உள்ளடக்கிய ஒரு உறுதியான அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்களின் உண்மைத்தன்மையை வாக்குறுதிகள் மூலமன்றி, தெளிவான தீர்மானங்களின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்

அத்துடன் அதிகாரப்பகிர்வு, அரசியல்கைதிகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தல் தொடர்பாக அமெரிக்க அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இவை செயற்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா நம்புகிறது.

கண்ணிவெடி அகற்றல் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றும் செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெற்று வருகின்றன.“ என்றும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

அருள் சொன்னது…

குழப்பும் வினவு: போற்க்குற்ற விசாரணையின் எதிரி யார்?

http://arulgreen.blogspot.com/2011/05/blog-post.html