வெள்ளி, 27 மே, 2011

இந்தோனேசியாவிலும் தொடர்கிறது பீரிசுக்கு நெருக்கடி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தோனேசியாவில் எகிப்து வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்காக பாலித்தீவு சென்றுள்ள ஜி.எல்.பீரிஸ், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இந்தோனேசியாவில் கடந்த இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த அவரால்- நேற்றுவரை எகிப்து வெளிவிவகார அமைச்சர் நபில் அல் அரபியை மட்டுமே சந்தித்துப் பேச முடிந்துள்ளது.

அதேவேளை, ருமேனிய வெளிவிவகார அமைச்சர் டொரு கோஸ்ரியாவை சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பேரேரா தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கும், சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

120 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்றும் இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையே இதுவரை சந்திக்க முடிந்துள்ளதானது, பீரிஸ் அங்கும் நெருக்கடியை எதிர்நோக்குவதைப் புலப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான நாடுகள் இருதரப்பு, பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார, வர்த்தக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குமே இந்தச் சந்திப்பில் முன்னுரிமை கொடுத்து வருகின்றன.

ஆனால் சிறிலங்கா தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசினால் அணுக முடியாதுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: