புதன், 25 மே, 2011

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவுக்கு சீனா ஆதரவு – மகிந்தவை பீஜிங் வருமாறும் அழைப்பு

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை விடயத்தில் சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பீஜிங் வருமாறும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நேற்று சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியை சந்தித்துப் பேசினார்.

இதன்போது சிறிலங்காவுக்கு சீனா தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது ஒரே சீனா என்ற கொள்கையில் சிறிலங்கா உறுதியாக இருப்பதாகவும், எதிர்கால வெளியுறவுக் கொள்கையிலும் இதுவே பின்பற்றப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் உறுதிபடக் கூறியுள்ளார்.

தீவிரவாதத்தை அடியோடு அழித்ததற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பாராட்டிய சீனா வெளிவிவகார அமைச்சர், வேகமாக வளர்ச்சி காணும் சிறிலங்காவின் பொருளாதாரம் குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

அத்துடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சீனாவுக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து இந்தச் சந்திப்பின் போது சீன வெளிவிவகார அமைச்சருக்கு ஜி.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் எடுத்துக் கூறினார்.

அதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சர், சிறிலங்கா அரசும் மக்களும் தமது சொந்தப் பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்வார்கள் என்று சீனா உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம், மீள்கட்டுமானம் போன்ற நடவடிக்கைளில் சிறிலங்கா தனது இலக்கை எட்டுவதற்கு சீனா ஆதரவு கொடுக்கும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி, மத்தால விமான நிலைய திட்டம், நுரைச்சோலை அனல்மின் திட்டம், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஆகியன குறித்தும் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அத்துடன் சீன வெளிவிவகார அமைச்சரை சிறிலங்கா வருமாறும் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் இறைமை, சுதந்திரம், பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்கான சீனாவின் ஆதரவை மதிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை இரண்டு நாள் பயணத்தின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சந்திக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.

ஆனால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: