வெள்ளி, 27 மே, 2011

தென்காசி நகர்மன்ற கூட்டத்திற்கு பாம்புடன் வந்த கவுன்சிலர்

குடிநீர் தொட்டி வளாகத்தில் புதர் மண்டிக் கிடப்பதை கண்டித்து தென்காசி நகர்மன்ற கூட்டத்திற்கு கவுன்சிலர் பாம்புடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி நகர்மன்ற கூட்டம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்தது. கூட்டம் துவங்கும் முன் 16-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது அலி தனது வார்டில் அமைக்கப்பட்டுள்ள 2 சாலைகள் தரமற்று இருப்பதாகவும், மேலும் இரண்டு சாலைகளில் கற்கள் பரப்பப்பட்டு பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும் புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்ட அரங்கின் வாயில் அமர்ந்து தர்ணா செய்தார். அப்போது ஆணையாளர் செழியன் நகர்மன்ற கூட்ட அரங்கிற்கு வந்தார். அவரை முகமது அலி மற்றும் மமகவினர், பொதுமக்கள் கூட்ட அரங்கிற்கு விடாமல் முற்றுகையிட்டனர்.

அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் ஆணையாளர் கூட்ட அரங்கிற்கு செல்ல முடியாமல் திரும்பினார். நகர்மன்ற தலைவர் கோமதி நாயகம் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி வெளியே வந்தார். அவரையும் முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஒப்பந்தகாரரின் பிரதிநிதி இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலை பணியை முடித்து தருவதாக எழுதி கொடுத்தார். அதில் நகர்மன்ற தலைவரும் கையெழுத்திட்ட பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கூட்டம் முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன் 10-வது வார்டு உறுப்பினர் ராசப்பா தனது வார்டில் உள்ள குடிநீர் தொட்டி வளாகம் புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் நிறைந்திருப்பதாகவும், மவுண்ட் ரோட்டில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கிற்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்காமல் இருப்பதையும் கண்டித்து கையில் பாம்புடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கருத்துகள் இல்லை: