வியாழன், 5 மே, 2011

கருத்து கணிப்புகள் சரியாகுமா?

கட்டுரையாளர் சோலை "முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவர்; என் மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவர் சோலை' என, கருணாநிதியால் வர்ணிக்கப்படுபவர். "நக்கீரன்' இதழில் இவர் எழுதும் தொடர் கட்டுரையின் மறுபதிப்பு இது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜெயலலிதா தான் என்று பிரகாஷ்காரத், ஏ.பி.பரதன் போன்ற இடதுசாரி தலைவர்கள் கட்டியம் கூறினர். "மே 15ல், ஜெயலலிதா முதல்வராக முடிசூடுகிறார்' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஈரோட்டில் பிரகடனம் செய்தார். ஏன்? அடுத்த முதல்வர் ஜெ., தான் என்று கடந்த ஓராண்டு காலமாகவே, ம.தி.மு.க., தலைவர் வைகோவும் முழங்கி வந்தார்.

இத்தகைய அறிவிப்புகள் எல்லாம், அ.தி.மு.க.,வினரை உற்சாகம் கொள்ளச் செய்தன. காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகள் என்று தி.மு.க., அறிவித்தது. காங்கிரஸ் தொண்டர்களை விட, அ.தி.மு.க.,வினர் தான் அதிகம் மகிழ்ந்தனர். பா.ம.க.,விற்கு 30 இடங்கள் என்று செய்தி வந்தது; அந்தக் கட்சி தொண்டர்களை விட, அ.தி.மு.க., தொண்டர்கள் தான் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தாங்கள் சந்திக்க போகும் இந்த எதிர் முகாம்கள் பலவீனமானவை என்பது அவர்கள் கணிப்பு. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., அங்கம் பெறுவது உறுதி என்ற தகவல் வந்த போது, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டதாகவே ஆர்ப்பரித்தனர். இந்த நிலையில் தான் கருத்து கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவைகள் நியாயமான கணிப்புகளும் அல்ல; நேர்மையான தீர்ப்புகளும் அல்ல.

கடந்த 1971ல், சட்டசபை, லோக்சபா தேர்தலில் போது கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. "ராஜாஜியும், காமராஜரும் அமைத்த கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க., கூட்டணி தோல்வியுறும்' என, கணிப்புக்களும், விமர்சனங்களும் வாரி இறைக்கப்பட்டன. ஆனால், மக்கள் எப்படி தீர்ப்பளித்தனர்? தி.மு.க., தமிழகத்தில் அரியணை ஏறியது; மத்தியில் இந்திரா பிரதமரானார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, டில்லி ஆங்கில தொலைக்காட்சிகளும் ஆங்கில வார ஏடுகளும் எப்படி கணித்தன? அகில இந்திய அளவில், பா.ஜ., ஆட்சி என்றனர். இல்லையேல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு பார்லிமென்ட் என்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி முன்பை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறியது. தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி ஒன்பதே இடங்களில் தான் வெற்றி பெறும். அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தன. தேர்தல் தீர்ப்பு எப்படி அமைந்தது என்பதை அறிவோம். அவர்கள் தங்கள் ஆசைகளை செய்திகளாக்குகின்றனர். தங்கள் விருப்பங்களை கருத்துக் கணிப்புக்களாக கதை புனைகின்றனர்.

பிரபல ஆங்கில வார ஏடும், அதன் தொலைக்காட்சியும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டிருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணிக்கு, 50 சதவீத ஓட்டுகளும், 164 தொகுதிகளும் கிடைக்கும். தி.மு.க., கூட்டணிக்கு, 45 சதவீத ஓட்டுகளும், 68 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பங்கள் உருவாவதற்கு முன் இந்த கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டன. இவர்கள் எல்லாம் மக்களிடம் எத்தகைய கேள்விகளை எழுப்பினர்? விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி இந்த பிரச்னைகளில் உங்களை மிகவும் பாதித்தது எது என்ற அளவில் தான் கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டிருக்கின்றவா? அதன் சாதனைகளில் தங்களைக் கவர்ந்தது எது? அந்தச் சாதனைகள் தொடர வேண்டுமா என்ற அளவில் எந்தக் கருத்துக் கணிப்பாளரும் மக்களிடம் கேள்விகள் எழுப்பவில்லை. மக்கள் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினரோ, அதற்கு ஏற்ப கேள்விகளை எழுப்பினர்.

இந்தச் சூழலில் நாம் ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறோம். தமிழக சட்டசபை தொகுதிகளில், 79 தொகுதிகள் நகர்புறத் தொகுதிகள், 164 தொகுதிகள் கிராமப்புறத் தொகுதிகள். தமிழக அரசின் நலத்திட்டங்கள் எட்டாத கிராமங்களே இல்லை. பயன் பெறாத குடும்பங்களே இல்லை. எனவே, எந்த அளவிற்குக் கிராம மக்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு வருகின்றனரோ, அந்த அளவிற்கு தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு அமையும். காங்கிரஸ் - பா.ம.க., - சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை, தி.மு.க., விட்டுக் கொடுத்திருக்கிறது. அவைகளில், 70 தொகுதிகளையாவது கைப்பற்ற முடியும் என, அ.தி.மு.க., கணக்கிட்டு சொல்கிறது. இந்த கணக்கின் விடை, 13ம் தேதி தெரிந்து விடும்.

கட்டுரையாளர் சோலை, பிரபல அரசியல் விமர்சகர்.

1 கருத்து:

baladba சொன்னது…

Solai is a DMK JALRA !!!