வியாழன், 5 மே, 2011

ஒசாமா சாப்பிட்ட கடைசி "நான்!'

"ஒசாமா, என்னிடம், கடைசியாக, "நான்' வாங்கி சாப்பிட்டதில் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், அவர், அமெரிக்காவுக்கே சவாலாக இருந்தவர்' என, அபோதாபாத்தில், சிறிய ஓட்டல் நடத்தி வரும், முகமது ஆசிப் கூறுகிறார். இஸ்லாமாபாத் அருகே, அபோதாபாத்தில், அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டது, அப்பகுதியில் குடியிருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் கூறுகையில், "எனக்கு, ஒசாமா முயல் கொடுத்தார். நான் அந்த முயலை வளர்த்து வந்தேன். அது இரண்டு குட்டிகளை ஈன்றது' என, வெகுளித்தனமாக கூறுகிறான். இச்சிறுவனை போல, ஒசாமா தங்கி இருந்த வீட்டிற்கு வந்து சென்றவர்கள் பற்றியும், செய்திகள் வெளியாகி வருகின்றன. ராணுவ கோட்டையாக விளங்கும் அபோதாபாத்தில், அதிக பாதுகாப்பு கொண்ட வீட்டில் இருந்து, அவ்வப்போது, அர்ஷத் மற்றும் தாரிக் கான் என்ற இருவர், அடிக்கடி வெளியே வந்து சென்றதாகவும், அவர்கள் இருவரும் தொழிலதிபர்கள் என, தங்களை காட்டி கொண்டதாகவும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர். மேலும், 40 வயது தோற்றம் கொண்ட அர்ஷத் தான், அந்த வீட்டை கட்டினார் என்றும், 30 வயது தோற்றம் கொண்ட தாரிக்கின் சகோதரர் தான் அர்ஷத் என்றும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள ஓட்டலில் வேலை பார்க்கும் சமையல்காரர் ஜாவேத் ஜாடி கூறுகையில், "அர்ஷத் மற்றும் தாரிக் இருவரும், தங்கள் குடும்பத்தினரை, அடிக்கடி, சிவப்பு கலர் மினி வேனில் வெளியே அழைத்து செல்வர். சில சமயங்களில், இவர்களுடன் சில குழந்தைகளும் வருவர்' என்கிறார். இங்கு, முகமது ஆசிப் என்பவர், சிறிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர், பாரம்பரிய முறையில், மைதாவின் மூலம், "நான்' தயாரிப்பதில் வல்லவர். இவர் ஓட்டலில் இருந்து தான், அர்ஷத், அடிக்கடி, "நான்' வாங்கிச் செல்வது வழக்கம். ஒசாமா கொல்லப்பட்ட அன்று இரவும், ஓட்டலுக்கு வந்து, அர்ஷத், "நான்' வாங்கி சென்றுள்ளார். இதுகுறித்து முகமது கூறுகையில், "நான் தயாரித்த, "நான்' கூட, ஒசாமா கடைசியாக சாப்பிட்டு இருக்கலாம். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஏனென்றால், அமெரிக்காவுக்கே சவால் விடுத்து வந்தவர் ஒசாமா' என்கிறார். உலகின், "நம்பர் ஒன்' பயங்கரவாதியின் வீட்டு அருகில், வசித்து வந்தவர்கள், தற்போது பிரமிப்பில், திகைப்பில் உள்ளனர்.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: