செவ்வாய், 10 மே, 2011

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் பிரெஞ்ச் மாணவர்கள்!

தமிழகத்திலிருந்து உயர் கல்விக்காக ஏராளமான மாணவர்கள் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளுக்கு படையெடுப்பது ஒருபுறம் இருக்க, பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழகம் உள்பட தென்னிந்தியாவை நோக்கி பிரெஞ்ச் மாணவர்கள் உயர் கல்வி கற்க வருவதாக கூறி வியக்க வைக்கின்றன பல்வேறு பல்கலைக்கழக அதிகாரிகள்.

சென்னை, வேலூர், புதுச்சேரி மற்றும் இதர தென்னிந்திய நகரங்களில் வந்து குவியும் பிரெஞ்ச் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் பல்வேறு பிரெஞ்ச் பல்கலைக்கழகங்களிலிருந்து 'exchange programme' எனப்படும் பரஸ்பரம் மாணவர்களை மாற்றிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் 8 மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில், அதாவது 2010-11 ல் 26 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக கூறுகிறார் அப்பல்கலைக்கழக அதிகாரி ஒருவர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் இந்த பரஸ்பரம் மாணவர்களை மாற்றிக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தங்களது மாணவர்களை அனுப்ப பல்வேறு பிரெஞ்ச் பல்கலைக்கழகங்கள் இந்த் ஆண்டு அதிக அளவில் ஆர்வம் தெரிவித்துள்ளன.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுப்ப,இதுவரை 14 பிரெஞ்ச் பல்கலைக்கழங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறுகிறது சென்னை பல்கலைக்கழகத்தின் பிரெஞ்ச் துறை.

சென்னை பல்கலைக்கழகத்தில் காணப்படும் இதே நிலைமைதான் சென்னை ஐஐடி-யிலும் காணப்படுகிறது. இந்த ஆண்டு 10 க்கும் அதிகமான மாணவர்கள் ஐஐடி-க்கு வந்துள்ளதாக கூறுகிறார் அதன் சர்வதேச தொடர்பு விவகாரங்களுக்கான அதிகாரி ஒருவர்.

பிரான்ஸில் உள்ள லியான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 24 வயது மாணவி கலோரினா இது குறித்து கூறுகையில், "ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை அனுபவிப்பதற்காகவே நான் சென்னையை தேர்ந்தெடுத்தேன்.டெல்லி போன்ற அதிகப்படியான மேற்கத்திய கலாச்சாரம் கொண்ட நகரங்களை விட தமிழகம் மிக அதிக அளவிலான பாரம்பரியம் கொண்டதாக விளக்குகிறது.இங்கே சென்னையில் திராவிட கலாச்சாரம் குறித்து என்னால் கற்றுக்கொள்ள முடிவதோடு, எனது படிப்படையும் தொடர முடிகிறது" என்கிறார். இவர் சென்னைக்கு வந்தது 2010 ஜூலை மாதம்.
சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்,புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி போன்ற மதிப்பு வாய்ந்த தொழில் கல்வி நிறுவனங்களும் பிரெஞ்ச் மாணவர்களை அதிகம் ஈர்க்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த பரஸ்பர மாணவர் பரிமாற்ற திட்டங்களை பிரான்கோ-இந்திய கல்வி கழகம் நடத்துகின்றது. 2008 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பில், இரு நாடுகளையும் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு தமிழகம் வரும் தங்களுக்கு படிப்பு விடயத்திலும்,வேலை பார்த்து கொடுப்பதிலும் சக தமிழக மாணவர்கள் உதவிகரமாக செயல்படுவது தங்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், தங்குவதற்கு வீடு கிடைப்பதுதான் மிகுந்த சிரமமாக இருப்பதாக கூறுகின்றனர் பிரெஞ்ச் மாணவர்கள்.

வீட்டு உரிமையாளர்கள் தமிழர் அல்லாத, அதிலும் குறிப்பாக அன்னிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மிகவும் தயங்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது ஒன்றுதான் தங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை என்று கூறும் காலோஷி என்ற பிரெஞ்ச் மாணவர், பொதுவாகவே தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் பெரிய அளவில் இல்லை என்பதால்தான் தாங்கள் தென்னிந்தியாவை அதிகம் விரும்புவதாக கூறுகிறார்.

பிரெஞ்ச் மாணவர்கள் தமிழகம் வந்து படிப்புடன் சேர்த்து தமிழக, குறிப்பாக திராவிட கலாச்சாரத்தை அறிந்துகொள்வதுபோன்று, தமிழக மாணவர்களும் பிரானஸ் சென்று அந்நாட்டு கலாச்சாரத்தை அறிந்துகொள்கின்றனர்.

கலாச்சாரம் என்றில்லை;எந்த ஒரு பரிமாற்றத்திலும் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை ஒதுக்கி தள்ளிவிட்டால் எந்த பரிமாற்றமுமே கெடுதல் இல்லை!
http://tamil.webdunia.com/newsworld

கருத்துகள் இல்லை: