வெள்ளி, 27 மே, 2011

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் மாற்றம்?

தமிழகத்தில், தி.மு.க., அரசு அறிவித்த, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான அரசின் அறிவிப்பு, விரைவில் வெளியாகும்.


தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், தமிழக அரசின் கணக்குப்படி, 23 சதவீதம் பேர், தற்காலிக வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள், 22.08 லட்சம் குடிசைகளில் வசிக்கின்றனர். இத்தகையோருக்கு, நல்ல தரமான வீடு கிடைக்க, "இந்திரா ஆவாஸ் யோஜ்னா' என்ற பெயரில், மத்திய அரசின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதால், திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசின் பங்காக, தமிழகத்துக்கு, ஆண்டுக்கு, 303.89 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதனுடன், தமிழக அரசு, தன் பங்காக, 101.30 கோடி ரூபாயையும் சேர்த்து, வீடு கட்டும் பணியை மேற்கொள்கிறது. இதன் மூலம், ஒரு நிதியாண்டுக்கு, 1.34 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. இதில், ஒவ்வொரு குடும்பத்துக்கும், 218 சதுர அடி பரப்பளவுக்கு, 60 ஆயிரம் ரூபாய் செலவில் வீடு கட்டித்தரப்படுகிறது. இதற்காகும் செலவில், மத்திய அரசிடமிருந்து, 45 ஆயிரம் ரூபாயும், மாநில அரசிடமிருந்து, 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இது, தமிழகத்தில் குடிசைப்பகுதிகளில் வசிப்போரின் தரமான வீடு தேவையை உடனடியாக பூர்த்தி செய்வதாக இல்லை. இதனால், தமிழகத்தில் ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு நியாயமான விலையில் குடியிருப்பு கிடைக்க, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி கழகம் ஆகியவை உள்ளன.


இவற்றின் திட்டங்கள் இருந்தாலும், தமிழகத்தில் குடிசைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே, குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்த, சிறப்பு திட்டமாக, அரசு மானியத்துடன் குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும், "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், ஆறு ஆண்டுகளில் அனைத்து குடிசை வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். ஆண்டுக்கு, மூன்று லட்சம் கான்கிரீட் வீடுகள், 2,250 கோடி ரூபாயில் கட்டப்படும். 210 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கும், 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. 22.08 லட்சம் பேர் குடிசைகளில் இருந்தும், 12.92 லட்சம் பேர் மட்டுமே, இத்திட்டத்துக்கான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வீடு பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.


கட்டுமானப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்த நிலையில், இந்த திட்டத்தில் வீடு கட்டுவதற்காக, அரசு தரப்பு மானியத் தொகையை, 75 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி வரை, இத்திட்டத்தில், 93 ஆயிரத்து, 314 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன என்றும், இதில், 60 சதவீதம் அளவுக்கான வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக, இதை அமலாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மார்ச் முதல் வாரத்தில், "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' தொடர்பான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு அமலாக்கப்பட்ட திட்டங்கள், மக்களின் உண்மையான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. உதாரணமாக, கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, 210 சதுர அடியாக இருப்பதால், பல இடங்களில் பயனாளிகள், அரசு மானியத்தைவிட கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, அரசு நிர்ணயித்த வீட்டின் பரப்பளவு, மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டு வருகிறது. இது போன்ற குறைபாடுகள், இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளன. தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்ட, 2 சென்ட் நிலம் மற்றம் குடிசைவாசிகளுக்கு, 300 சதுர அடி பரப்பில், சூரிய சக்தி மின் வசதி உள்ளிட்ட, பசுமை கட்டட தொழில்நுட்பத்தில் அரசு மானியத்துடன் வீடுகள் கட்டித் தரப்படும்' என, அறிவிக்கப்பட்டது.


இதன் அடிப்படையில், வீட்டின் பரப்பளவு, 210லிருந்து, 300 சதுர அடியாக மாற்றுவது, அரசு மானியத்தை, 1.5 லட்சம் ரூபாய் வரை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களை செய்வது குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெறுவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத ஊரக வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு, கவர்னர் உரை அல்லது பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி, இன்னும், 12 லட்சம் வீடுகள் கட்ட, நிதி ஒதுக்க வேண்டும். வீடு ஒன்றுக்கு, 1.5 லட்சம் வீதம், மொத்தம், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

http://www.dinamalar.com/


கருத்துகள் இல்லை: