புதன், 25 மே, 2011

துக்கத்தோடு வாழும் மனிதர்கள்

துக்கத்தோடிருக்கும் மனிதர்களைச் சந்திப்பதென்பது கொடுமையான அனுபவம். ஆனால், என்ன செய்வது? இந்த மாதிரி மனிதர்களே வன்னியில் அதிகமாக இருப்பதால் அவர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்.

இது வன்னியில் நடந்த யுத்தம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைகின்ற நாட்கள். இதைச் சரியாகச் சொன்னால் வன்னிச் சனங்கள் வரலாற்றில் என்றுமே சந்தித்திராத கொடுமைகளையும் இழப்புகளையும் சந்தித்த நாட்கள்.
இந்த நாட்களில்தான் பலர் தங்கள் உறவுகளை இழந்தனர். பலருடைய பிள்ளைகளும் கணவர்களும் காணாமற் போனார்கள். காணாமற் போனவர்களில் பலர் இந்த நாட்களில்தான் கொல்லப்பட்டனர் என்று இப்போது தெரியவருகிறது.
இன்னும் பலருடைய பிள்ளைகளும் கணவர்களும் சரணடைந்த நிலையில் இந்த நாட்களில்தான் படையினரால் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அப்படிச் சிறைக்கு அனுப்பப்பட்டவர்களின் உறவுகளான இரண்டுபேரை ஒரு நாள் மதியநேரம் வன்னியின் புழுதி பறக்கும் தெருவில் சந்தித்தேன்.
ஒருவருடைய பெயர் நாகராசா மகேஸ்வரி (வயது 53)

அடுத்தவர் கார்த்திக் வனஜா (வயது 28)
துக்கத்தோடு வாழும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள்?
00
எங்கயிருந்து வந்து கொண்டிருக்கிறியள்? எங்கே போறீங்கள்?
மகேஸ்வரி:- பூஸாவுக்குப் போட்டு வாறம். அங்கதான் எங்கட பிள்ளையை வைச்சிருக்கிறாங்கள். முந்தநாள் போனனாங்கள். இண்டைக்குத்தான் திரும்பி வாறம். இப்ப எங்கட வீட்டுக்குப் போறம். வீடு பூநகரியில இருக்கு.
ஏன் அவரைப் பூஸாவுக்குக் கொண்டு போச்சினம்? எப்ப அங்க கொண்டு போனவை?
மகேஸ்வரி:- இதென்ன கேள்வி? இதைப் போய் ஆரிட்டக் கேட்க ஏலும்? சண்டை முடிஞ்ச பிறகு (2009 மேயில்) நாங்கள் வன்னிக்கு வெளியில வந்திட்டம். ஆனால் எங்கட பிள்ளையைக் காணேல்ல.
அவன் கடைசிப் பிள்ளை. அஞ்சாவது. அவனைப் பற்றி எந்தத் தொடர்புமில்லை. அந்த நேரத்தில இதைப் பற்றி ஆரிட்டக் கேட்க முடியும்? அப்பிடியிருந்தும் நாங்கள் தெரஞ்ச ஆக்களிட்ட அவனைப் பற்றிக் கேட்டம். ஒருத்தருக்கும் அவனைப் பற்றித் தெரியேல்ல.
அப்ப நாங்கள் என்ன வெளியில போய்த் தேடவா முடியும்? எங்களையெல்லாம் பஸ்ஸில ஏத்திக் கொண்டு போய் வவுனியாவில இருக்கிற செட்டிகுளம் மெனிக் பாமில கொண்டு போய் விட்டிட்டாங்கள்.
அங்கயும் தேடிப்பாத்தம். எங்களைப் போல பலபேர் இப்பிடிப் பிள்ளையளைத் தேடிக் கொண்டிருந்தினம். கனபேர் தங்கட புருசன்மாரைத் தேடிக் கொண்டிருந்தினம். நாங்களும் ஆனமட்டும் தேடிக் களைச்சுப் போனம். ஒரு தகவலும் தெரியாது.
இவ்வளவுக்கும் அவன் 2007 இலதான் இயக்கத்தில சேர்ந்தவன். அப்ப இயக்கம் ஊரில வீட்டுக்கு ஒருத்தர் எண்டு எல்லாரையும் சேர்த்துக் கொண்டிருந்திது. இவன்தான் கலியாணம் கட்டாமல் இருந்தான். அதால இவன்தான் போகவேண்டியிருந்திது.
அப்ப போனவனைப் பிறகு நாலைஞ்சு தடவைதான் பாத்திருக்கிறம். இடம்பெயர்ந்து போனதுக்குப்பிறகு ரெண்டு தடவை மட்டுந்தான் கண்டம். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ எண்டு சொல்லுவான். ஆனா, நாங்கள் யோசிக்கமல் இருக்க ஏலுமே!
அப்ப, ஆளைக் காணேல்ல. என்ன நடந்திதோ எண்டு தெரியாமல் இருந்தம். எங்களைப் போலத்தான் அவனும் இருந்திருக்கிறான். எங்களைத் தேடிக் கொண்டு. நாங்கள் எங்க இருக்கிறம், எப்பிடி இருக்கிறம், என்ன செய்யிறம் எண்டு தெரியாத நிலையில அவனிருந்திருக்கிறான்.
என்ன நடந்திது எண்டால், அவனும் சண்டை முடிஞ்ச கையோட எல்லாரைப் போலயும் ஆமியிட்டச் சரணடைஞ்சிருக்கிறான். அவங்கள் முதல்ல வவுனியா – ஓமந்தையில வைச்சிருந்திருக்கிறாங்கள்.
பிறகு வெலிக்கந்தவுக்குக் கொண்டு போய், அங்க ஒரு ஆறு மாதம் வைச்சிருக்கிறாங்கள். அப்பதான் எங்கட ஊர்ப் பிள்ளையொண்டு தன்ரை புருசனைப் பாக்கப் போகேக்க இவனைப் பற்றி அறிஞ்சுபோட்டு வந்து எங்களுக்குச் சொல்லிச்சு.
அப்பதான் எங்களைப் பற்றி அவனுக்கும் அவனைப் பற்றி எங்களுக்கும் தெரிஞ்சுது.
அதுக்குப் பிறகுதான் நாங்கள் அங்கபோய்ப் பிள்ளையைப் பார்த்தம்.
அதைப் பற்றி என்னத்தைச் சொல்ல? படு கேவலமாக இருந்தான். பிள்ளைக்கு கடுமையான யோசினை. எங்களைப் பற்றி ஒருபக்கம். தன்னைப் பற்றி ஒருபக்கம். எப்ப விடுவாங்கள்? அதுக்கிடையில என்ன செய்வாங்கள்? இனி எங்க கொண்டு போவாங்கள்? எண்டு ஏராளம் கவலை.
ஒரு இடத்தில கனநாளைக்கு ஆக்களை வைச்சிருக்க மாட்டினமாம். அடிக்கடி இடம் மாத்திக் கொண்டிருப்பினமாம். சில இடங்களில வசதிகளில்ல. சில இடங்களில வசதி இருந்தாலும் கடுமையான விசாரணை, அது இதெண்டு ஒரே கரைச்சலாம்.
அதைவிட நல்ல சாப்பாடில்ல. மனசில நிம்மதியில்லையெண்டால் என்னதான் செய்யேலும்?

நாங்கள் வெலிக்கந்தவுக்குப் போய்ப் பாத்தம். எங்களைக் கண்டிட்டு அவன் பட்ட பாடு. அழுத அழுகை. என்ன குற்றம் செய்தம் கடவுளே! இப்பிடிக் கண்ணீரும் கம்பலையுமாக இருக்க என்ன பாவம் செய்தம்?

பிறகு எப்ப பூஸாவுக்குக் கொண்டு போனார்கள்?
மகேஸ்வரி:- வெலிக்கந்தவில இருக்கேக்கை நானும் தகப்பனும் போய்ப் பாத்தம். சகோதரங்களும் போய்ப் பாத்துதுகள். அப்ப நாங்கள் முகாமில இருந்தபோது ஆகப் பெரிய கஸ்ரம். கையில காசும் இல்லை. கண்டபடி வெளியில போகவும் ஏலாது.
பிள்ளையைப் போய்ப் பாக்கிறதெண்டால், முதல்ல பதிய வேணும். பிறகு கார்ட் எடுத்துக் கொண்டு போய்ப் பாத்திட்டுச் சொன்ன தவணைக்கு வந்திட வேணும். எங்களுக்கு அந்த இடம் பழக்கமில்ல. பாசையும் தெரியாது. ஆக்களையும் தெரியாது. அதால பெரிய கஸ்ரப்பட்டம். ஆனா, அங்க இருக்கிற முஸ்லிம் ஆக்கள் நல்ல மனுசர். அதுகள் எங்களைத் தங்க விட்டுதுகள். சாப்பாட்டுக்கு மட்டும் காசெடுத்துதுகள்.
வெலிக்கந்தவில ஒரு அஞ்சாறு தடவை போய்ப் பாத்தம். அதுக்குப் பிறகு ஒருநாள் திடீரெண்டு பூஸாவுக்கு மாத்திப் போட்டாங்கள்.
பூஸாவுக்கு மாத்தினாப் பிறகு எங்களுக்கு அறிவித்தல் வர பதினைஞ்சு நாள் ஆகீட்டுது. அதுமட்டும் அவன் வெலிக்கந்தவிலதான் இருக்கிறான் எண்டு நினைச்சுக் கொண்டிருந்தம்.
பூஸாவுக்கு மாத்தினாப்பிறகு, அங்க எப்பிடிப் போறதெண்டு தெரியாது. தகப்பனுக்கும் கால் ஏலாது. அவரால அவ்வளவு தூரம் பிரயாணம் செய்யேலாது. மற்றப் பிள்ளையளும் அடிக்கடி போய்ப் பாக்கிற நிலைமையில இல்ல. எல்லாருக்கும் வசதியும் வேணுமே. அதுகளும் பிள்ளை குட்டிகாரர். எல்லாரும் தோட்டம்தான் செய்யிறவையள். நாங்கள் விவசாயக் குடும்பம். இவன்தான் கொஞ்சம் படிச்சவன். ஏதாவது உத்தியோகம் பார்ப்பான் எண்டு இவனைத்தான் நம்பியிருந்தம்.
இப்ப நான்தான் பூஸாவுக்குப் போறனான். நான் மட்டும் தனியாகப் போய் வாறதெண்டாலும் எப்பிடியும் ஒரு எட்டுப் பத்தாயிரமாவது வேணும்.
போகேக்கை வெறுங்கையோட போகேலுமே! பிள்ளையோட இருக்கிற மற்றப் பெடியளுக்கும் ஏதாவது பலகாரம் செய்து கொண்டு போகவேணும். அதுக்குக் காசு வேணும். குறைஞ்சது ஒரு நாலாயிரமாவது தேவை. பிறகு இவனுக்கு உடுப்பு, செருப்பு, சவுக்காரம், சேவ் எடுக்கிற சாமான்கள் எண்டு அதுகளுக்கும் காசு வேணும். இதைவிடப் போய் வாற செலவு.
பூஸா எண்டால் என்ன ஏதோ பக்கத்தில இருக்கிற இடமா? மூண்டு நாள் பயணம். முதல்நாள் வீட்டை இருந்து காலமை ஆறு மணிக்கு வெளிக்கிட்டால் அண்டைக்கு இரவாகும் நாங்கள் கொழும்புக்குப் போய்ச் சேர. அங்க இரவு தங்கி, விடியப்புறம் மூண்டு அல்லது நாலுமணிக்கு கொழும்பில இருந்து வெளிக்கிட்டால் காலிக்குப் போக விடிஞ்சு எட்டு ஒன்பது மணியாகும். பிறகு பூஸாவுக்குத் தனி பஸ்.
அங்க போய்த் துண்டெடுத்துப் பதிஞ்சு, காவலிருந்து, பிறகு ஆள்வரப் பார்த்துக் கதைச்சுப் போட்டுத் திரும்பவேணும்.
இதில கொடுமை என்னவெண்டால் இவ்வளவு கஸ்ரப்பட்டு, இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து அங்க போனால், அங்க சிலவேளை ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிசம்தான் கதைக்க விடுவாங்கள்.
ஆனால், நாங்கள் என்ன செய்ய முடியும்? ஏதோ பிள்ளையின்ரை முகத்தைப் பாக்கிறதே போதும் எண்டு நினைச்சுக் கொண்டு திரும்பவேண்டியதுதான்.
இந்தத் தடவை போகேக்கை அவன் நல்லாக் கலங்கியிருக்கிறான். கெதியில அங்கயிருந்தும் மாத்தப் போறாங்கள் போல கிடக்கு எண்டு. அதுக்கிடையில தன்னை எப்பிடியும் வெளியில எடுக்கச்சொல்லிக் கெஞ்சிறான்.
நாங்கள் என்ன செய்யிறது? இஞ்ச வாற எம்பிமாரிட்டக் கடிதம் குடுத்திருக்கிறம். அதுக்கு மேலை எங்களால என்ன செய்ய ஏலும்?
வாறமாதம் மூத்த மகளின்ர பிள்ளைக்குச் சாமத்தியச் சடங்கு வருகுது. அதுக்கு எப்பிடியும் ஒருக்கா வீட்ட எடுக்கச்சொல்லி நிக்கிறான்.
ஆனால், அதுக்கு எப்பிடியும் ஒரு இருவது ஆயிரம் ரூபாய் தேவை. இஞ்சயிருந்து ஜீ.எஸ்ஸை (கிராம அலுவலரை)க் கூட்டிக் கொண்டு போய், அவர் கையெழுத்துப் போட்டுப் பிணை எடுத்துக் கொண்டு வரவேணும். அதுக்குத் தனியாக வாகனம் பிடிக்க வேணும். இல்லையெண்டால், எங்களைப் போல அவரையும் பஸ்ஸிலை கூட்டிக் கொண்டு போய் வந்து போறதெண்டால் போய் வரத்தான் நாள் சரியாக இருக்கும்.
பிள்ளைக்குக் குடுக்கிற லீவு அதோட முடிஞ்சு போகும். அதால எப்பிடியும் தனியாக ஒரு வான் பிடிக்கத்தான் வேணும். அதுக்கு காசுக்கு எங்க போறது. ஆனால், அவன் அழுகிறான். என்ன செய்யிறது எண்டு தெரியாமல் இருக்கிறம்.
இதுக்கிடையில பூஸாவுக்குப் போய், சிலவேளை ஒரு நாள் அங்க நிக்க வேண்டியுமிருக்கும். அப்பிடி நிக்கிறதெண்டால், அதுக்குத் தனியாகக் காசு வேணும். தமிழாக்களின்ர காசு சிங்களக் கடையளுக்கும் சிங்கள ஊர்களில ஓடுகிற பஸ்களுக்கும் போய்ச்சேருது. கடவுளே! இந்தச் சோதனைக்கெல்லாம் எப்பதான் முடிவு வருமோ?
சரி, நீங்கள் சொல்லுங்கோ, வனஜா! உங்கட கணவர் இப்ப எங்க இருக்கிறார்?
வனஜா:- இவரும் பூஸாவிலதான் இருக்கிறார். இப்ப பூஸாவுக்குத்தான் போட்டு வாறம். நாலு பிள்ளையளில ஒண்டைத்தான் இந்தத் தடவை கூட்டிக் கொண்டு போய்வாறம். எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு போய்வரேலாது. அப்பிடியெண்டால் இன்னொரு ஆள் துணைக்கு வேணும். எல்லாரும் போய் வாறதெண்டாலும் கனக்கக் காசு வேணும்.
இவரும் இல்லாமல் நான் தனியக் கஸ்ரப்படுகிறன். செலவுக்கு அப்பாவும் தம்பியவையுந்தான் ஏதோ கொஞ்ச உதவி செய்வினம். அவையிட்ட எல்லாத்துக்கும் கேட்க ஏலாது. அதைவிட எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு போகப் போறன் எண்டால் அதுக்கு எப்பிடிப்போய் உதவி கேட்கிறது.
அவையும் இப்பதான் மீள் குடியேற்றத்தில வந்து தொழில் செய்யினம்.
மற்றப் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு போகேல்லை எண்டு இவருக்குக் கவலையும் கோவமும். ஆனால், நான் என்ன செய்யிறது? வீட்டில பிள்ளையளும் தகப்பனைப் பாக்கப் போறம் எண்டு ஒரே கரைச்சல். ஒருமாதிரியாகச் சமாளிச்சு அம்மாவுடன் விட்டிட்டுப் போய் இப்ப வாறன்.
இதுகளை நினைச்சால் பேசாமல் அந்த நேரம் அங்க முள்ளிவாய்க்காலில செத்திருக்கலாம் போல கிடக்கு.
இப்ப உங்கட கணவர் எப்பிடி இருக்கிறார்? அவருடைய விடுதலையைப் பற்றி ஏதாவது தகவல்?
வனஜா:- இதெல்லாம் ஆருக்குத் தெரியும். கலியாணம் கட்டின ஆக்கள் எண்டு கொஞ்சப் பேரை விட்டிருக்கினம். இன்னும் ஒரு கொஞ்சப் பேரை விடப்போகினம் எண்டு பதிவெடுத்திருக்கினம். ஆனால், எப்ப விடுவினம் எண்டு தெரியாது.
முந்தியும் இப்பிடி இரண்டு தடவை இந்த விடுகிறம் எண்ட மாதிரிச் சொல்லிப் போட்டுக் கடைசியில விடேல்ல.
ஆனால், இவர் இயக்கத்தில இருக்கவேயில்லை. தோட்டந்தான் செய்தவர். எங்கட அப்பா குடிக்கிறவர். அதால நான் மூத்தபிள்ளையாக இருந்தும் படிக்கேலாமற் போட்டுது. நான் சின்ன வயசிலயே வேலைக்குப் போகத் துடங்கீட்டன்.
வேலைக்குப் போன இடத்திலதான் இவரைப் பார்த்து, கலியாணம் நடந்திது. அப்ப எனக்கு 19 வயது. எல்லாமாக நாலு பிள்ளையள். மூண்டாவது பிள்ளை செத்துப் போச்சு. முகாமில காய்ச்சல் வந்திது. இவரும் அப்ப இல்லை. எனக்கும் துணையில்லை. மற்றப் பிள்ளைகளைக் கவனிக்கிறது எப்பிடி? இந்தப் பிள்ளையைக் காப்பாத்திறது எப்பிடி எண்டு எனக்கு விளங்கேல்ல. இந்த நிலைமையிலதான் பிள்ளை செத்தது.
இது எங்களுக்குத் தீராத கவலை. நான் இவரைப் பாக்கப் போனபோது, இதுக்காக இவர் என்னோட கதைக்கேல்ல. நான் என்ன செய்யிறது? எனக்கு மட்டும் இந்தப் பிள்ளையைப் பற்றிக்கவலை இல்லையே!
என்ரை வயிறும் எரியுதுதான். அந்தப் பிள்ளையை நினைச்சு அழாத நாளே இல்லை.
இவர், முந்தி எல்லைப் படையில பயிற்சி எடுத்தவர் எண்டு ஆரோ சொல்லிப் போட்டினம். இவர் எல்லைப் படையில இருந்தவர்தான். அப்ப ஆர்தான் அப்பிடி இருக்கேல்ல. இப்ப ஆளை ஆள் காட்டிக் குடுத்துக் கொண்டிருக்கினம்.
அப்படி இருந்தும் இவர் ஆருக்கும் எந்தத்தீங்கும் செய்யேல்ல. ஆனால், விடுகிறாங்கள் இல்லை.
இவரைக் கலியாணம் செய்த பிறகுதான் நாங்கள் மூண்டு நேரமும் சாப்பிட்டிருக்கிறம். கொஞ்சம் கஸ்ரமில்லாமல் இருந்திருக்கிறம். இவர் நல்ல உழைப்பாளி. ஓரு நேரமும் சும்மா இருக்க மாட்டார்;. அப்பாவிட்ட குறைகளை எல்லாம் இவர்தான் தீர்;த்து வைச்சார். அதால வீட்டில இவருக்கு நல்ல மரியாதை. இவ்வளவுக்கும் இவர் கூலிக்குத்தான் போகிறவர். வீட்டில கொஞ்சமாகத் தோட்டமும் வைச்சிருந்தம். இப்ப ஒண்டுமில்ல.
எனக்குக் கொஞ்ச உதவி கிடைச்சிருக்கு. அதை ஒழுங்கு படுத்திச் செய்யிறதுக்கு ஆளில்ல. உதவியும் இல்ல.
உங்களுடைய இந்த நிலைமையைப் பற்றியும் உங்கடை கணவருடைய விடுதலையைப் பற்றியும் யாரிடமாவது கதைத்துப் பார்த்தீங்களா?
வனஜா:- கடிதங்கள், மகஜர்கள் எண்டெல்லாம் பலருக்கும் குடுத்திருக்கிறன். நான் மட்டும் இல்ல. என்னைப் போலப் பலபேர் அப்பிடிக் குடுத்திருக்கினம்.
சிலபேர் விடுவிக்கப்பட்டிருக்கினம். சிலபேரை வேற இடங்களுக்கு மாத்தியிருக்கினம். என்ன நடக்கிது எண்டு எங்களுக்கு விளங்கேல்ல.
இப்ப இவரை வேற இடத்துக்கு மாத்தாமல் விட்டாலே போதும். புது இடமெண்டால், அந்த இடத்தைத் தேடிப் போறது கஸ்ரம். பிறகு அங்க போய்வாறதுக்குப் பழகவேணும். அங்க இருக்கிற ஆக்களோட சாப்பாட்டுக்கும் உதவிக்கும் எண்டு புதிசா பழகவேணும்.
போர் முடிஞ்சு ரண்டு வருசமாகிறது. இந்த இரண்டு வருசத்திலயும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் என்ன?
வனஜா:- போர் நடக்கேக்கையே நாங்கள் அலையத் தொடங்கீட்டம். அப்பயிருந்து இண்டைக்கு வரைக்கும் அலைச்சல்தான். இது இன்னும் எவ்வளவு காலம் தொடரும் எண்டு தெரியேல்ல.
போர் முடிஞ்ச பிறகு இன்னும் என்ரை கணவர் சிறையில – தடுப்பில இருந்தால் நாங்கள் எப்பிடி அமைதியாக இருக்க முடியும்?
இவரை வெளியில எடுக்கிறதுக்கு லோயரிட்ட (சட்டத்தரணியிட்ட) போய்ப் பதிஞ்சு வழக்கைப் போடுங்கோ எண்டு சிலபேர் சொல்லுகினம். அப்பிடிச் சிலபேர் செய்யினம்.
நாங்களும் அப்பிடிச் செய்யலாம். ஆனால், அதுக்குக் காசு வேணுமே. காசிருந்திருந்தால் எவ்வளவையோ செய்யலாம். ஆளையே வெளிநாட்டுக்கும் அனுப்பியிருக்கலாம்.
எங்களிட்ட காசில்லாமற் போனதாலதான் பெத்த பிள்ளைகளையே தகப்பனிட்டக் கூட்டிக் கொண்டு போய்க் காட்ட முடியாமல் இருக்கு.
நீங்கள் எதுவரை படிச்சிருக்கிறியள்? இப்ப என்ன வேலை செய்யிறீங்கள்?
நான் எட்டாம் வகுப்போட படிப்பை நிறுத்திப் போட்டன். முந்தி அட்டைக்குப் போவன். இப்பவும் அந்தத் தொழில் தெரியும். கறி தெரியப் போறது. கடற்கரைக்குப் போனால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் தருவினம். சொந்தக்கார ஆக்கள் தொழில் வைச்சிருக்கிறதால பிரச்சினையில்லை.
ஆனால், இந்த வருமானம் போதாது. எண்டாலும் இதை விட்டால் வேற வழியில்லை. இவருக்கு இப்பிடி நான் கஸ்ரப்படுகிறது விருப்பம் இல்லை. ஆனால், இப்ப வேற வழியில்லை எண்டு தெரியும். அதால ஒண்டுஞ்சொல்ல மாட்டார். நானும் இதைப் பற்றி இவரிட்ட எதையும் கதைக்கிறதில்லை.
நாங்கள் இப்படியே காலம் முழுக்கக் கவலைப்படத்தான் பிறந்திருக்கிறம் போலை. வன்னியில பிறந்ததாலை நாங்கள் படுகிற பாடும் கஸ்ரமும் கொஞ்சமில்லை...
பூஸாவில இருக்கிற கைதிகள் எப்பிடியான மன நிலையில் இருக்கிறார்கள்? அங்கே என்ன நிலைமையில அவர்கள் வைத்திருக்கப்படுகினம்?
மகேஸ்வரி:- அதை எப்பிடிச் சொல்லிறது? எல்லாரும் எப்ப விடுவாங்கள் எண்ட நினைப்பிலதான் இருக்கினம். சிலபேர் நல்லா மனங்குழம்பியிருக்கினம் எண்டு மகன் சொன்னவன். சிலபேருக்கு இன்னும் குடும்பங்களோடயே தொடர்பில்லையாம். கைதியெண்டால் பிறகு சொல்ல வேணுமே. அதிலயும் இப்ப இவையளைப் பற்றி ஆரும் கேட்கவோ கதைக்கவோ ஆளில்ல எண்ட நிலையில இருக்கேக்கை சொல்லவே வேணும், - எப்பிடி இவை இருப்பினம் எண்டு.
இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறியள்?
மகேஸ்வரி:- நாங்கள் என்னத்தைச் சொல்லிறது? எங்கட பிள்ளையளோட நாங்கள் சந்தோசமாக இருக்கிற காலம் ஒண்டு வரவேணும். பெத்த பிள்ளையை வீட்டில வைச்சிருக்க முடியாத ஒரு காலம் இன்னும் ஏதோ ஒரு வகையில தொடர்ந்து கொண்டுதானிருக்கு.
எங்களுக்காகக் குரல் குடுக்கிறதுக்கு உண்மையா ஒருத்தரும் இல்ல. இதத்தான் அங்க – பூஸாவில இருக்கிற ஆட்களும் சொல்லுகினம். பாவம் அங்க இருக்கிற பெடியள். இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா எதையாவது வித்தோ சுட்டோ நாட்டை விட்டுப் போயிருக்கலாம். இஞ்ச இருந்து படுகிற பாட்டைச் சொல்லேலாது.
சண்டை முடிஞ்சாலும் நாங்கள் அலைஞ்சு கொண்டிருக்கிறது முடியேல்ல.
வனஜா:- எனக்கு நாங்கள் எல்லாம் ஒண்டாக இருக்கிற ஒரு நிலை வந்தாற் போதும். இவர் வந்திட்டால் நாங்கள் எப்பிடியோ முன்னேறிவிடுவம். ஆனால், இவரை எப்பிடி வெளியில எடுக்கிறது எண்டுதான் தெரியேல்ல.
நாட்டுப்பிரச்சினை இப்போதைக்குத் தீரும் போல தெரியேல்ல. அநியாயமாக நாங்கள் தான் எங்கட வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறம். இவர் தெளிவாச் சொல்லிப் போட்டார், இனி எந்தப் பிரச்சினையிலையும் சிக்காமல் இருக்க வேணும் எண்டு. வெளியில வந்திட்டார் எண்டால் நாங்கள் எங்கட பாட்டைப் பாத்துக் கொண்டிருந்திடுவம்.
00
இந்த இரண்டு பெண்களும் (கவனிக்கவும் - இரண்டு தலைமுறையினர் - ஒருவர் தாயாக இருந்து பிள்ளைக்காக அழுகிறார். அடுத்தவர் மனைவியாக இருந்து கணவருக்காக அழுகிறார்).
பசிக்களைப்போடும் பிரயாணக் களைப்போடும் தங்கள் உறவுகளின் கவலைகளின் மத்தியிலும் என்னுடன் உரையாடியமைக்கு நன்றி. இடையிடையே இவர்கள் துக்கந்தாழ முடியாமல் அழுதார்கள். சில சந்தர்ப்பங்களில் இவர்கள் கோபப்பட்டனர். இவர்களின் கவலைகளும் கோபங்களும் எல்லாத்தரப்பினர் மீதும் இருந்தன என்பதை இங்கே வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
00


விதுல் சிவராஜா

NANTRY http://www.ponguthamil.com

பொங்குதமிழை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்!கருத்துகள் இல்லை: