வியாழன், 5 மே, 2011

பிணையில் விடுவிக்கப்பட்டபோதும் செலுத்த பணம் இல்லாததினால் மீண்டும் சிறை சென்ற விடுதலைப்புலி போராளி

விடுதலைப்புலி இயக்கத்தில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்றவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஏழு வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணை செலுத்த பணம் இல்லாத நிலையில் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்ற சம்பவம் மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி பிரதேசத்தின் பாரதிபுரத்தை சேர்ந்த கந்தசாமி கரன் (31வயது) என்பவர் வந்தாறுமூலையில் திருமணம் முடித்துள்ளார். இவர் கடந்த 2004 ம் ஆண்டு மோட்டார் சைக்களில் சென்றுகொண்டிருந்தபோது படையினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

தீங்கு விளைவிக்கும் ஆயுதச்சட்டத்தின் கீழும், வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழும், சுடுகலன் சட்டத்தின் கீழும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எதிரி சார்பில் பிரபல சட்டத்தரணி செல்வி கிருத்திகா முத்துராஜா ஆஜராகியிருந்ததுடன் அரச தரப்பின் சார்பில் சட்டத்தரணி ஐங்கரன் ஆஜராகியிருந்தார்.

இந்த நிலையில் இவரது வழக்கு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்த்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கடந்த 7 வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் 5000ரூபா காசுப்பிணையிலும், 150,000 ரூபா இரண்டு சரீரப்பிணையிலும் செல்ல மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபரின் குடும்பத்தினரில் பலர் கடந்த கால யுத்தத்தின்போது உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சந்தேக நபரின் மனைவியும் வேறு ஒரு திருமணம்செய்து கொண்டு சென்றுள்ள நிலையில் குறித்த நபர் பிணையில் 5000 ரூபா செலுத்த முடியாத நிலையில் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

அத்துடன் அவரை பிணையில் எடுத்துச்செல்லவும் யாரும் அற்ற நிலையில் உள்ளார்.

இதுபோன்று பலரின் நிலை கிழக்கு மாகாணத்தில் உள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் உதவ உதவும் அமைப்புக்கள் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

http://www.tamilwin.com

கருத்துகள் இல்லை: