திங்கள், 16 மே, 2011

சிறிலங்காவின் இரட்டைக்குடியுரிமை மீள்பரிசீலனை செய்யப்படுகிறதா?

தற்போது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள இரட்டைக் குடியுரிமை தொடர்பான விவகாரம் தொழில் தேடி வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்காண சிறிலங்கர்களின் குடியுரிமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தொழில் வாய்ப்புக்களுக்காகவும், தமது குடும்பத்து நிலையைக் கருத்திற்கொண்டும் புலம்பெயர்ந்தவர்கள், தமது பிறப்பிடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இரட்டைக்குடியுரிமை தேவை எனப் பார்க்கப்படுகிறது.

இரட்டைக்குடியுரிமை நிறுத்தப்படும் சந்தர்ப்பத்தில், இதனை அடைந்து கொள்ள விரும்புவோர் மிக சிக்கலான நிலைக்குத் தள்ளப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரீதியில், இரட்டைக்குடியுரிமையைக் கொண்டுள்ள முக்கிய சில அரசாங்கத் தலைவர்களும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும்.

சிறிலங்கா அதிபரின் சகோதரர்களின் ஒருவரான பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையைக் கொண்டுள்ளார். பிறிதொரு சகோதரனான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது சிறிலங்காக் கடவுச்சீட்டுடன், அமெரிக்காவின் கடவுச்சீட்டான Green Card ஐயும் கொண்டிருக்கிறார்.

இரட்டைக்குடியுரிமை விவகாரம் தற்போது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதனை மீண்டும் அறிமுகப்படுத்துவது கடினமானதொரு விடயமாகும் எனவும் சிறிலங்காவின் குடிவரவு, குடியகழ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி W.A.C.பெரேரா தெரிவித்துள்ளார்.

"மீண்டும் மீண்டும் நாங்கள் புதிய சட்டங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக ஒரு சரியான தீர்மானம் எட்டப்பட்ட பின்னர் மக்களுக்கு அறியத்தரப்படும்" எனவும் பெரேரா சண்டேலீடரிடம் தெரிவித்துள்ளார். மேலும், "இது தொடர்பான சரியான தீர்வை எட்டமுடியாமலுள்ளது. மிக அண்மையில் இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வரும். நாங்கள் தற்போது அதிபர் ராஜபக்சவின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்" எனவும் பெரேரா தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள புலம்பெயர்ந்து வாழும் 35,000 வரையானவர்கள் தொடர்பான பிரச்சினைகளும் கருத்திலெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதுஎவ்வாறிருப்பினும், இவ்விடயத்தில் ராஜபக்சவின் சகோதரர்களது இரட்டைக்குடியுரிமையும் நிறுத்தம் செய்யப்படுமா என பெரேராவிடம் வினாவப்பட்டபோது, "இது தொடர்பாக என்னால் நிச்சயமான பதில் எதனையும் கூறமுடியாதுள்ளது" எனப் பதிலளித்தார்.

"இரட்டைக்குடியுரிமையை நிறுத்திவைத்தமை ஒரு தற்காலிக செயற்பாடாகும். இதற்குரிய பதில் 2-3 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும். இது தொடர்பாக எடுக்கப்படும் புதிய தீர்மானம் எவ்வாறானதாக இருக்கும் என்பது தொடர்பாக எனக்குத் தெரியாது. இதனை மீளாய்வுக்குட்படுத்துமாறு அதிபர் ராஜபக்ச எமக்கு பணித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை தொடர்பான பழைய நடைமுறைக்கும் தற்போது அறிமுகப்படுத்தவுள்ள புதிய நடைமுறைக்கும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் இதனை ஏற்கனவே வைத்திருப்பவர்கள் தமது பயணங்களின் போது எவ்வித அசௌகரியங்களுக்கும் முகங்கொடுக்கத் தேவையில்லை" என சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டுத்திணைக்களத்தின் மூத்த அதிகாரியான I.C.R.பத்திராஜா உறுதிபடக் கூறுகின்றார்.

வெளிநாடொன்றின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட ஒரு முன்னாள் சிறிலங்காக் குடிமகன்(ள்) அல்லது வெளிநாடொன்றின் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் சிறிலங்காவில் தற்போது வாழும் குடிமகன்(ள்), சிறிலங்காவின் சமூக-பொருளாதார அபிவிருத்தியில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தால் மட்டுமே இரட்டைக்குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

இதன் கீழ் ஐந்து பிரதான வகைப்படுத்தல் கவனத்திற்கொள்ளப்படுகின்றன. அவையாவன:

1. தொழில் முறைசார் வகைப்படுத்தல்
2. சொத்து,உடைமைகள் சார் வகைப்படுத்தல்
3. நிலையான வைப்புசார் வகைப்படுத்தல்
4. மூத்த குடிமக்கள்சார் வகைப்படுத்தல்
5. NRFC/RFC/SFIDA சார் வகைப்படுத்தல்

இரட்டைக்குடியுரிமையப் பெற்றுக்கொள்ள ரூபா 200,000 ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். குடியுரிமையைப் பெறுபவர்களின் துணைவர்கள் அதாவது கணவன், மனைவி போன்றோர் தமக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள ரூபா 50,000 ஐக் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது.

சிறிலங்காவின் சமூக-பொருளாதார அபிவிருத்தியில் தமது பங்களிப்பை வழங்காதவர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்கும் சந்தர்ப்பத்தை நிராகரிப்பது தொடர்பாக அரசாhங்கம் ஆராய்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலைமை நடைமுறைக்குவருமாயின் இன,மத அடிப்படையில் மக்கள் ஓரங்கட்டப்பட்டுவிடுவார்களோ என்கின்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இரட்டைக்குடியுரிமை தொடர்பான புதிய பரிந்துரை எவ்வாறானதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எதிர்பார்த்தவண்ணம் ஆயிரக்கணக்கணக்கான புலம்பெயர்வாழ் சிறிலங்கர்கள் இருப்பார்கள் என்பது தெட்டத்தெளிவானதாகும்.


கொழும்பை தளமாகக்கொண்ட thesundayleader வார ஏட்டில் Janith Aranze
'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி

கருத்துகள் இல்லை: