வெள்ளி, 6 மே, 2011

ரஸ்யாவும் சீனாவும் சிறிலங்காவைக் கைவிட்டு விடக் கூடும் - எச்சரிக்கிறார் விஜேதாச ராஜபக்ச

மேற்குலகைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக ரஸ்யாவும் சீனாவும் சிறிலங்காவைக் கைவிட்டு விடக் கூடும் என்று ஐ.தேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

“ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையானது சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகள் மீதுமே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது- அது நாட்டின் தனியொரு பகுதி மீது குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை.

இந்த அறிக்கையானது ஐ.நா பொதுச்செயலரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளதால், அனைத்துலக சமூகத்தின் மத்தியில் பெறுமதி வாய்ந்தது.

இது ஐ.நா சாசனங்களுக்கு முரணானது என்றும் அனைத்துலகச் சட்டங்களுக்கு முரணானது என்றும் நாம் வாதிட்டு எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஐ.நா பொதுச்செயலரின் அங்கீகாரத்துடனேயே அது வெளியிடப்பட்டுள்ளது.

அதனால் அதற்கு ஒரு பெரிய பெறுமதி உள்ளது. இதை தவறாகவும் பயன்படுத்த முடியும். முறைகேடாக பயன்படுத்தவும் முடியும்.

2009ம் ஆண்டில் மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் அதை சிறிலங்கா அரசு சமாளித்துக் கொண்டது.

மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் எதுவும் இடம்பெற்றதாக நம்பகமான எந்தவொரு ஆதாரமோ தகவல்களோ முன்வைக்கப்படாததால் அப்போது சமாளிக்க முடிந்தது.

ஐ.நாவின் அறிக்கை வெளியான பின்னர், அப்போது ஆதரவளித்த சில நாடுகள் சிறிலங்காவுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளலாம்.

சீனாவோ ரஸ்யாவோ தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது. அவை முற்றிலும் ஜனநாயக நாடுகள் அல்ல.

அவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பகைத்துக் கொள்வதைத் தவிர்க்க சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும் போது சமூகமளிக்காமல் ஒதுங்கிக் கொள்ளவும் கூடும்.

ஏனென்றால் அவற்றின் 60 தொடக்கம் 70 வீதம் வரையிலான சந்தை மேற்குலகையே தங்கியுள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: