வியாழன், 26 மே, 2011

போர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது

இனப் படுகொலை தொடர்பான குற்றச்ச்சாட்டுக்களுக்குள்ளாகி 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கே மிலடிச் கைது செய்யப்பட்டுள்ளார்.

செர்பியாவின் வடக்கேயுள்ள ஒரு கிராமத்திலிருந்து வியாழக்கிழமை காலை அவர் கைதுசெய்யப்பட்டதாக செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் தெரிவித்துள்ளார்.

போலி அடையாள ஆவணங்களுடன் அவர் தனது உறவினருக்கு சொந்தமான சிதிலமடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் கைது செய்யப்படும் போது எதிர்ப்புக் காட்டவில்லை என்று செர்பிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை அவர் பொதுமக்கள் மத்தியில் தென்பட்டபோது இருந்த தோற்றத்துடன் ஒப்பிடுகையில் இப்போது அவர் மிகவும் வயதானவராக தோன்றுகிறார்.

இந்த கைதானது செர்பிய வரலாற்றின் ஒரு அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர் டாடிக் அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து புதிய அத்தியாயத்தை துவக்க இந்த கைது வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். சிரபெரநிட்சா இனப்படுகொலை உள்ளிட்ட போஸ்னிய போர் குற்றம் தொடர்பாக ஜெனரல் மிலாடிச் குற்றத்தை எதிர்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் மிலாடிச் பெல்கிரேடில் உள்ள ஒரு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார். அதே நேரம் அவரை தி ஹேக்கில் இருக்கும் சர்வதேச போர் குற்ற தீர்பாயத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ஜெனரல் மிலடிச் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்ரநிட்சா என்ற இடத்தில் இவரின் தலைமையின் கீழ் செயல்பட்ட படையினர் 8500 முஸ்லீம்களை கொன்றனர் என்பதுதான் இவர் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு.

செர்பியத் தலைவர் ஸ்லோபோதான் மிலாசவிச் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்ட 2000 மாவது ஆண்டு வரை மிலாடிச் பெல்கிரேடில் வெளிப்படையாகவே வாழ்ந்து வந்தார். இவரின் கைதை பல உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்

http://www.bbc.co.uk

கருத்துகள் இல்லை: