ஞாயிறு, 8 மே, 2011

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை – கொழும்புடன் கலந்துரையாட விரைகிறது இந்தியாவின் உயர்மட்டக்குழு

சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ள ஐ.நாவின் அறிக்கையால் எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசுடன் கலந்துரையாடுவதற்கு இந்தியாவின் அதிகாரம்மிக்க உயர்நிலைக் குழுவொன்று இந்தவாரம் கொழும்பு வரவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு வரும் இந்தக் குழுவில், இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

பசில் ராஜபக்ச, கொத்தாபய ராஜபக்ச, லலித் வீரதுங்க குழுவினரை சிறிலங்கா அதிபர் புதுடெல்லிக்கு அனுப்ப முயற்சித்த போது ஜுன் மாதத்துக்கு முன்னர் அவர்களைச் சந்திக்க நேரமில்லை என்று கூறிய இந்தியா, தமது உயர்நிலை அதிகாரிகள் குழுவை திடீரென கொழும்புக்கு அனுப்பவுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதப்படுகிறது.

அதேவேளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவைச் சந்திக்க எதிர்வரும் 16ம் நாள் புதுடெல்லி செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தியாவின் உயர்மட்டக்குழு கொழும்பு வரவுள்ளது.

இந்திய அதிகாரிகளின் குழு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட பலருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் அறிக்கையை அடுத்து எழுந்துள்ள நிலையை சமாளிக்க பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை வேகப்படுத்துமாறு சிறிலங்காவிடம் இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதேகருத்தையே, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் கொழும்பு வந்திருந்தபோது வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: