ஞாயிறு, 29 மே, 2011

சிறிலங்காவை சீனாவும் கைவிட்டது - கவலையில் மகிந்த அரசாங்கம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் சீனப் பயணத்தின் போது கூட்டறிக்கை ஒன்றை வெளியிட முடியாது போனதும், ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக சீனாவிடம் இருந்து தெளிவான வாக்குறுதியை பெற முடியாது போயுள்ளதும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வாரஇதழ் ஒன்றின் அரசியல் விவகாரப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

“புதுடெல்லிப் பயணத்தின் பின்னடைவை அடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடந்தவாரம் சீனா சென்றிருந்தார்.

பீஜிங்கில் அவருக்கு அதிகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் பேச்சுக்களின் பின்னர் கூட்டறிக்கையோ அல்லது அறிக்கையோ வெளியிடப்படவில்லை.

வெளிவிவகார அமைச்சின் சார்பில் பீரிஸ் கொழும்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப் பணித்திருந்தார்.

இந்தியாவுக்கு பீரிஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் எவரையும் அழைத்துச் செல்லவில்லை.

இந்திய- சிறிலங்கா உறவுகள் குறித்த முக்கியமான தருணத்தில் பேச்சுகளுக்குச் செல்லும்போது வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உதவியாளர் இன்றி சென்றது இதுதவே முதல்முறை.

ஆனால் பீஜிங் சென்றபோது அவர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியான சோபினி குணசேகரவை அழைத்துச் சென்றிருந்தார். இவர் முன்னர் பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றியவர்.

சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சியை சந்தித்த பின்னர் கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அது சீனாவுடன் சேர்ந்து பீரிஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போனதை வெளிப்படுத்தியது. அப்படியான கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தால் அது மிகவும் கனதியானதாக இருந்திருக்கும்.

புதுடெல்லியில் பீரிஸ் ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக கலந்துரையாடியிருந்த போதும் இந்தியாவுடனான கூட்டறிக்கையில் அதுபற்றிக் குறிப்பிடப்படவேயில்லை.

பீஜிங்கில் ஐ.நா அறிக்கை பற்றிக் கலந்துரையாடப்பட்டிருந்த போதும், அதற்கு விரோதமான கருத்தை சீனா வெளியிடவில்லை.

மிகவும் முக்கியமான இந்த விவகாரத்தில் சீனாவிடம் இருந்து உறுதியானதொரு வாக்குறுதியை பீரிஸ் பெறமுடியாது போயுள்ளது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கவலையடையச் செய்துள்ளது.

சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் இந்தப் பேச்சுக்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை, பீரிஸ் வெளியிட்ட அறிக்கையை விட சற்று வேறுபாடானதாகவே இருந்தது.

பேச்சுக்கள் தொடர்பாக சீன வெளிவிவகார அமைச்சு அறிக்கை எதையும் வெளியிடாத சந்தர்ப்பங்களில், சிக்குவா செய்தி நிறுவனம் வெளியிடும் செய்தியையே அரசியல் மற்றும் இராஜதந்திர ஆய்வாளர்கள் சீனாவின் அதிகாரபூர்வ கருத்தாக எடுத்துக் கொள்கின்றனர்.

பீரிசின் சந்திப்புக்குப் பின்னர் சின்குவா வெளியிட்ட செய்தியில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட ஐ.நாவின் அறிக்கை பற்றி குறிப்பிடப்படவில்லை.

இந்த அறிக்கையை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் கூட அதில் கூறப்படவில்லை.

பீரிஸ் கூறியது போல இந்த அறிக்கை பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தால், சீனா எதற்காக இந்த விவகாரம் பற்றி தொடர்ந்தும் மௌனமாக இருக்கிறதென்பது மர்மாக உள்ளது“ என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் கருத்து வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: