ஞாயிறு, 8 மே, 2011

ஆதரவை மீளாய்வு செய்ய நேரிடும்” - ரஸ்யாவும் சீனாவும் சிறிலங்காவுக்கு எச்சரிக்கை

ஐ.நாவைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் பான் கீ மூனை இழிவுபடுத்தக் கூடாது என்றும் சிறிலங்கா அரசுக்கு ரஸ்யாதாவும் சீனாவும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் பணியாற்றும் எந்தவொரு அனைத்துலக அமைப்புக்கோ அல்லது அதன் பணியாளர்களுக்கோ இடையூறை ஏற்படுத்தக் கூடாது என்றும் இந்த நாடுகள் அறிவுரை கூறியுள்ளன.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் சிறிலங்கா அரசும் அதைச் சார்ந்த சக்திகளும், ஐ.நா மற்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிராக தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வந்தன.

ஐ.நா பொதுசெயலரை இழிவுபடுத்தும் வகையிலான பேரணிகள் போராட்டங்களை தொடர்நது நடத்தினால், மகிந்த ராஜபக்ச அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை மீளாய்வு செய்ய நேரிடும் என்று ரஸ்யாவும், சீனாவும் எச்சரித்துள்ளதாகர இராஜத்தந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அனைத்துலக அமைப்புகளையும் அதன் அதிகாரிகளையும் இழிவுபடுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்து கொள்ளுமாறும் இந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

ஐ.நா அறிக்கை வெளியான பின்னர் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதில் இந்த நாடுகள் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும், இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஐ.நா பொதுச்செயலரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டு நடத்தப்பட்ட போராட்டங்களின் பின்னர் தான் ரஸ்யாவும் சீனாவும் இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு விடுத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்தே ஐ.நா பொதுச்செயலருக்கு எதிரான போராட்டங்களை சிறிலங்கா அரசு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: