செவ்வாய், 17 மே, 2011

ஜெயலலிதாவின் வருகையால் அதிருப்தியடைந்துள்ள சிறிலங்கா அரசாங்கம்

தமிழ் நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றமை, சிறிலங்காவின் ஆட்சியாளர்களுக்கும், பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

இது விடயத்தில் சிறுபான்மைத் தமிழர்கள் இரு வெப்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். அதாவது சட்டசபைத் தேர்தலில், தி.மு.க பெரும் தோல்வியைச் சந்தித்தை ஒரு தொகுதித் தமிழ் மக்கள் சந்தோசத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர் விடயத்தில் புதுடில்லியின் கொள்கையை மாற்ற முடியாது என இன்னொரு பகுதி தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பான தீர்வுகளை எடுப்பதற்கு தமிழ் நாட்டு அரசியற் தலைவர்களின் தலையீடு எவ்விதத்திலும் உதவாது என சிறிலங்காவின் நாடாளுமன்றப் பேச்சாளர் கெகலிய றம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசு என்ற ரீதியில் சிறிலங்காவானது புதுடில்லியுடன் தான் தொடர்புகளைப் பேணும். மாறாக இந்தியாவின் எந்த மாநிலத்துடனும் இராஜதந்திரத் தொடர்பைப் பேணத் தேவையில்லை எனவும் றம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதுடில்லிக்கும், கொழும்புக்கும் இடையில் நல்லதொரு உறவு நிலை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். பேச்சாளர் றம்புக்வெலவின் கருத்தானது, பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட தென்னிலங்கையின் பொதுவான நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

"புதுடில்லி தனக்குச் சரியாகப் படுவதை மட்டுமே செய்யும். இந்த ரீதியில் சிறிலங்கா விடயத்திலும் தனக்குச் சரியெனப்படுவதையே டில்லி செய்யும். தமிழ்நாட்டுக்கும் டில்லிக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் பேணப்படவில்லை. அத்துடன் தமிழ்நாட்டின் கொந்தளிப்பு என்பது டில்லிக்கு மிகச் சிறிய விடயமே. ஆதலால் சிறிலங்கா விடயத்தில் தமிழ்நாட்டின் அழுத்தம் டில்லி அரசாங்கத்திற்கு இருக்கமாட்டாது" என மலிந்த செனவிரட்ணவால் கொழும்பிலிருந்து வெளிவரும் The Nation பத்திரிகைக்காக எழுதப்பட்ட ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா தனது கூட்டணிக்கட்சிகளுடன் மட்டுமே விவாதிப்பார். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, ஈழத்தமிழர் விவகாரத்தை தனது மத்திய அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதைக் காட்டிலும், தனது மாநிலக் கட்சிகளுடன் இது தொடர்பாக விவாதத்தை மேற்கொள்வதிலேயே அதிக கரிசனம் காட்டுவார்" என The Island இன் ஆசிரியர் Prabath Sahabandu தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கத்தக்க வகையில் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றி அமைந்திருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் விளைவால் கணவன்மாரை இழந்த 80,000 தமிழ்ப் பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவையும் அனுசரணையையும் தமிழர்களாகிய நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக காங்கிரசுடன் இணைந்து தி.மு.க கைக்கொண்ட கொள்கையுடன் தமிழ் நாட்டு மக்கள் உடன்படவில்லை என்பதைத் தெளிவாக வெளிக்காட்டும் ஒரு தேர்தல் முடிவாகவே அண்மையில் இடம்பெற்ற தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் உள்ளதாக வீரகேசரி வார இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஈழத்தமிழர்க்ள பல்வேறு விதமான அபிப்பிராயங்களை கொண்டிருந்தாலும், இது விடயத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர்" என வீரகேசரி வார இதழின் ஆசிரியர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"மே 2009ல் சிறிலங்காவின் வடபகுதியில் போர் உக்கிரம் அடைந்ததுடன், 40,000 வரையிலான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட போது அதனைத் தடுத்து நிறுத்தவதற்கான எந்தவொரு பயனுள்ள முயற்சியையும் தி.மு.க எடுக்கவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடே இக்கட்சியின் தோல்விக்கான பிரதான காரணம்" என யாழ் மாவட்டத்தின் பிரபல வர்த்தகர் சேகரன் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டு மக்களால் தற்போது வழங்கப்பட்டுள்ள ஆணையானது இதற்கு முதல் நடந்த தேர்தல்களின் போது வெளிப்படுத்தப்பட்டிருந்தால், மே 2009 இல் முல்லைத்தீவில் அரங்கேறிய இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான M.K. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், ஈழத்தமிழர்கள் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை அதிகளவில் நம்பியிருக்கக் கூடாது என தினக்குரல் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் தற்போதிருக்கும் நிலையைப் பெரிதும் மாற்றிவிடாது என்பதே ஒட்டு மொத்த சிங்கள, தமிழ் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

"தனது நலனைக் கருத்திற்கொள்ளும் போது மட்டுமே தமிழ்நாட்டின் கருத்துக்களை புதுடில்லி செவிமடுக்கும் என்பது நடைமுறை உண்மையாகும். ஆகவே இந்தியாவின் மொத்த சனத்தொகையில் வெறும் 6 சதவீதத்தை மட்டும் கொண்ட தமிழ் நாட்டு மக்களின் விருப்புக்கள் நிறைவேற்றப்படுவது சாத்தியப்பாடற்றதாகும்" என்பது யாழ் பல்கலைக் கழகப் பட்டதாரியான பிரேமின் கருத்தாகும்.

http://www.puthinappalakai.com/

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

கருணாநிதிதான் தனது உறவுகளின் நலன்கயளுக்காக ஈழததமிழர் எம்மை கைவி்ட்டார். அப்போது எதிர்கட்சி தலைவராய் இருந்த இந்த ஜெயா என்ன செய்தார். தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்கயளுடன் சேர்ந்து ஒரு எதிர்ப்பையாவது தெரிவித்திருக்கலாமே? அன்றைய கொந்தளிப்பில் இவரது எதிர்ப்பு அரசுக்கு ஒரு அச்சததையாவது கொடுத்திருக்கலாம். இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்கள். இனியும் இவர்களை நம்பி மோசம் போக ஈழத்தமிழர் இளிச்ச வாயர்கள் அல்ல. கருணாநிதியின் தோல்வி எமக்கு மகிழ்ச்சியே. ஆயினும் ஜெயாவின் வெற்றியில் அல்ல.