வியாழன், 26 மே, 2011

இந்தியாவை பகைத்துக் கொண்டால் சிறிலங்காவைத் தண்டிக்க தயங்காது – எச்சரிக்கும் றொகான் குணரட்ண

இந்தியாவின் பூகோள மூலோபாய விருப்பங்களுக்கு முரணாக சிறிலங்கா செயற்படுமானால், இந்தியா மீண்டும் ஒரு குழப்பநிலையை உருவாக்கும். சிறிலங்காவை மீண்டும் ஒருமுறை தண்டிக்கவும் அது தயங்காது என்று எச்சரித்துள்ளார் சிங்கப்பூர் நயங்யாங் பல்கலைக்கழக பேராசிரியர் றொகான் குணரட்ண.

கொழும்பில் சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தில் Shippers’ Academy நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

“2009இல் முடிவடைந்த 30 ஆண்டுகாலப் போரின் தொடக்கத்தில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தது.

இது ஒரு தவறு. அது மீண்டும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது. அப்படி இடம்பெற்றால் அதனால் நாம் மிகவும் பாதிக்கப்படுவோம்.

சீனாவுடன் அதிகப்படியான நெருக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவுடன் விரோதத்தை வளர்ப்பது சிறிலங்காவுக்கு ஆபத்தானது.

சீனாவுடன் நாம் காதல் கொண்டால், மீண்டும் ஒரு முறை சிறிலங்காவை இந்தியா தண்டிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சீனாவிடம் இருந்து சிறிலங்கா தொடர்ந்தும் பொருளாதார உதவிகளைப் பெறமுடியும். ஆனால் அதற்காக இந்தியாவைப் பகைக்கக் கூடாது.

இந்திய புலனாய்வு சேவைகளுடன் சிறிலங்கா விரோதமாக நடந்து கொள்வதாக இந்தியா உணர்ந்து கொண்டால், 1980களில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு பயிற்சிகளை அளித்தது போன்று மீண்டும் ஒருமுறை சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா பயிற்சிகளை வழங்கும்.

இனப்போரின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் தளம் அமைத்திருந்த தமிழ்ப் பிரிவினைவாதிகள் படகுகளில் வந்தே தாக்குதல்களை நடத்தினர்.

அப்போது சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் பலரும் மேற்கு நாடுகளின் பக்கம் சார்ந்து நின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் மேற்குலக சக்திகள் போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்த போது இந்தியா கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் படை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை பெற்ற ஒரே நாடாக இந்தியாவே இருந்தது.

இந்தியாவுடன் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருந்த நெருக்கமான உறவு காரணமாக, போரை நிறுத்தும் முயற்சிகள் சாத்தியப்படவில்லை.

நாம் இந்தியாவைப் பகைத்துக் கொண்டால், இந்தியா எம்மைத் தண்டிக்கும். ஏனைய பல நாடுகளுடன் சேர்ந்து இந்தியா அதைச் செய்யும்“ என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: