வியாழன், 26 மே, 2011

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முன்னிலையில் உடன்பாடு – ஐ.நா மீது கடும் விமர்சனம்

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான திணைக்கள அதிகாரிகளை சிறிலங்காவின் ஐ.நாவுக்கான தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்தவாரம் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது. ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் படையினர் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாக இல்லாதிருப்பதை உறுதி செய்யும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா அமைதிப்படையின் கௌரவத்தை உறுதி செய்யும் வகையிலேயே ஐ.நா அமைதிப்படைக்கு படையினரை அனுப்பும் உறுப்பு நாடுகளுடன் இத்தகைய உடன்பாட்டை ஐ.நா செய்து வருகிறது.

இதன்படி, எதிர்காலத்தில் எத்தகையவர்களை சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனைகளை ஐ.நா முன்வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த உடன்பாட்டில் சிறிலங்காவின் சார்பில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன கையெழுத்திட்டதாகவும், அப்போது ஐ.நாவுக்கான தூதுவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முன்னிலை வகித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில்- அவரது முன்னிலையில் மனிதஉரிமைகளுடன் தொடர்புடைய உடன்பாடு ஒன்றை ஐ.நா செய்து கொண்டுள்ளது முரண்பாடானது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி, “இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது சிறிலங்கா என்ற ஒரு உறுப்பு நாட்டுடனேயே தவிர, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா என்ற தனிநபருடன் அல்ல“ என்று கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: