புதன், 8 ஜூன், 2011

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகுகிறது

திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் பத்தாம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் முக்கிய முடிவுகளை திமுக தலைமை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்து விட்டதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியது முதலே திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவில் புகைச்சல் கிளம்பியது. இருந்தாலும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு அமைதி காத்து வந்தது திமுக.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் சீட் கேட்டு பேரம் பேச ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அதிக சீட்களை வாங்கி போண்டி ஆனது.

தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியுடன் இதுவரை சோனியா காந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும், கருணாநிதியின் மகள் கனிமொழியை சிபிஐ அதிரடியாக கைது செய்து திஹார் சிறையில் அடைத்து விட்டது. தற்போது தயாநிதி மாறனின் பதவிக்கும் பேராபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். திருவாரூரில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, எனது மகள் கனிமொழி இன்று கடும் வெப்பத்துடன் கூடிய திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட மத்திய அரசுதான் காரணம் என்று பேசியிருந்தார்.

இதனால் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான புகைச்சல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

இந்தப் பின்னணியில் திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் ஜூன் 10ம் தேதி மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் முடிவு அல்லது மத்திய அமைச்சர்களை மட்டும் வாபஸ் பெற்று வெளியிலிருந்து ஆதரவு தருவது என்ற முடிவு ஆகியவற்றில் ஒன்று எடுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: