வியாழன், 30 ஜூன், 2011

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ரூ. 1000 கோடி தங்க நகைகள் கண்டுபிடிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்நாபசுவாமி கோவிலில் உள்ள நான்கு பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு செய்ததில் கிடைத்த நகைகளின் மதிப்பு ரூ. 1000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பழமையானது. இங்கு ஆறு பாதாள அறைகள் உள்ளன. அதில் என்ன உள்ளது என்பதைத் திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பபட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அதன்படி மொத்தம் உள்ள 6 பாதாள அறைகளில் 4 அறைகளை இக்குழு ஆய்வு செய்து பார்த்தது. அப்போது பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆய்வின்போது பெருமளவிலான நகைகள்,பாத்திரங்கள், பணம் உள்ளிட்டவை கிடைத்தன. அவற்றின் மதிப்பை அறிய கணக்கீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீட்டில் அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1000 கோடி இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

பெரிய பெரிய தங்கச் சங்கிலிகள், தங்க நாணயங்கள், தங்கக் குடங்கள், நவரத்தினக் கற்கள் பொறித்த தங்க ஆபரணங்கள், பெருமளவிலான பணக் கட்டுக்கள் இந்த அறைகளில் இருந்துள்ளன. மிகப் பழமையான இந்த ஆபரணங்கள், பாத்திரங்கள், நகைகள் உள்ளிட்டவை கிட்டத்தட்ட 150 ஆண்டு பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.

மேலும் உள்ள 2 அறைகளை விரைவில் திறக்கவுள்ளனர். அங்கு வைரம் மற்றும் வைடூரிய நகைகள், பொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

18வது நூற்றாண்டில், திருவாங்கூர் சமஸ்தானத்தின் மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது இந்தக் கோவில். திருவாங்கூர் சமஸ்தான குடும்பத்தினரைக் கொண்ட அறக்கட்டளை மூலம் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/06/30/assets-worth-rs-1000-crore-kerala-temple-secret-rooms-aid0091.html

கருத்துகள் இல்லை: