புதன், 1 ஜூன், 2011

20 கிலோ இலவச அரிசி திட்டம்-ஜெ தலைமையில் மிக மிக எளிமையாய் நடந்த அரசு விழா

தமிழக அரசின் புதிய இலவச அரிசித் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். எந்தவித அமளியும் இல்லாமல் மிகவும் எளிமையாக இந்த அரசு விழா நடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இனி அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அந்தக் கடைக்கு பசுமை நிறத்தில் வண்ணம் பூசி ஜொலி ஜொலிக்க வைத்திருந்தனர். மாவட்டங்கள்தோறும் அமைச்சர்கள் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

புதிய திட்டத்தின்படி தற்போது ரேஷன் கடைகளில் மாதம் 20 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ. 1 என வாங்கி வரும் ரேஷன் அட்டைதாரர்கள் இனிமேல் அதை இலவசமாக பெறுவார்கள்.

மேலும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக தகுதி படைத்தோருக்கு வழங்கப்படும்.

இன்று காலை 10 மணிக்கு இந்த இலவச அரிசித் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரிசியை வழங்கினார்.

வழக்கமான அமளி துமளி இல்லாமல் படு எளிமையாக விழா நடந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள், அதிமுகவினர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதல்வர் பதவியை ஏற்ற பின்னர் ஜெயலலிதா பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இது என்பதால் ஜெயலலிதாவுக்கு உற்சாகமான வரவேற்பை அதிமுகவினர் அளித்தனர்.

தமிழகத்தில் அரிசி பெறத் தகுதியுடைய 1 கோடியே 83 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 12 முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.

இதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி அளிக்கப்படுகிறது.

இலவச அரிசி திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொலைபேசி எண்ணில் (044-28592828) தெரிவிக்கலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இலவச அரிசியை எப்போது வேண்டுமானாலும் எந்த நாளிலும் பெற்றுக் கொள்ளலாம். எனவே அரிசி கிடைக்காதோ என்று பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: இலவச அரிசி வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று எளிமையாக நடந்தது. மற்ற அரசு விழாக்களும் இதுபோல் நடக்குமா?

பதில்: அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும். வீண்- ஆடம்பரமாக செலவு செய்து அரசு விழாக்களை நடத்தக்கூடாது என்பது இந்த அரசின் கொள்கை. அடுத்து தொடரும் திட்டங்களுக்கான விழாவும் இதுபோல் எளிமையாக நடைபெறும்.

கேள்வி: புதுச்சேரியில் உள்ள ரேசன் கடைகளில் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை எந்த ரேசன் பொருட்களையும் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டிலும் அந்த நிலை வருமா?

பதில்: தமிழ்நாட்டிலும் இனி எல்லா பொருட்களையும், ரேசன் கடைகளில் எப்போதும் வாங்கலாம். பொருட்களை பதுக்கி வைக்கும் நிலை இனி இருக்காது.

கேள்வி: கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச டி.வி, இலவச வீடு திட்டம் தொடருமா?

பதில்: கவர்னர் உரையில் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி: அரசு கஜானா திருப்தியாக இருக்கிறதா?

பதில்: அதை இப்போது சொல்ல இயலாது. அது பற்றிய விவரத்தை கவர்னர் உரையிலும், மீதியை பட்ஜெட்டிலும் சொல்வோம்.

கேள்வி: அண்ணா பல்கலைக் கழகங்கள் ஒன்றாக இணைக்கப்படுமா?

பதில்: கவர்னர் உரையில் அதற்கான பதில் தெரியும்.

கருத்துகள் இல்லை: