ஞாயிறு, 19 ஜூன், 2011

நாளை ஜாமீன்மனு விசாரணை: சி.பி.ஐ. புகாருக்கு கனிமொழி பதில்; “கலைஞர் டி.வி.க்கு வந்த ரூ.200 கோடி கடனாக வாங்கியது”

கலைஞர் டி.வி.க்கு வழங்கிய ரூ.200 கோடி கடன்தான் என்று கனிமொழி பதில் மனு தாக்கல் செய்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இருக்கும் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது. அவர் கலைஞர் டி.வி.யில் முக்கிய பங்குதாரராக செயல்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் பின்னணி உள்ளதால் ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து கனிமொழியும், சரத்குமாரும் சுப்ரீம்கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். கடந்த 10-ந் தேதி இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 13-ந் தேதி ஜாமீன் மனுக்கள் விசாரணைக்காக வந்தன. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும் ஆ.ராசா பதவி காலத்தில் 13 டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பீடு குறித்து சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு கைமாறிய ரூ.200 கோடி என்ன ஆனது? என்ற விவரத்தை கோர்ட்டுக்கு தெரிவிக்குமாறும் சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 20-ந் தேதி வழக்கை தள்ளி வைத்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கில் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து குசேகான் புரூட்ஸ் அன்வெஜிடபிள்ஸ் நிறுவனம் மற்றும் சினியுக் பிலிம்ஸ் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. இது கடனாக வழங்கப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்காக சட்டவிரோதமாக பெறப்பட்ட பணம் என்று கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்த பின்புதான் ரூ.200 கோடி பணத்தை கலைஞர் டி.வி. திருப்பி வழங்கியுள்ளதாகவும், சி.பி.ஐ. பதில் மனுவில் கூறியுள்ளது.

சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கனிமொழி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று 47 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனிமொழி சார்பில் வக்கீல் வி.ஜி.பிரகாசம் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில் கலைஞர் டி.வி.க்கு ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வாவிடம் இருந்து ரூ.200 கோடி பணம் முறைப்படி கடனாகத்தான் பெறப்பட்டுள்ளது. இதில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை. வர்த்தகம் தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது. அதை சி.பி.ஐ. தவறாக சித்தரித்துள்ளது.

ரூ.200 கோடி கடனுக்கு மார்க்கெட் நிலவரப்படி வட்டி வழங்கப்பட்டுள்ளது. இதில் எல்லா சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டு இதை சரியாக ஆராயாமல் கனிமொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

நாளை கனிமொழியின் ஜாமீன்மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது சி.பி.ஐ. தரப்பிலும், கனிமொழி தரப்பிலும் ஆஜராகி வாதாடுகிறார்கள். இருதரப்பு வாதங்களும் முடிந்த பிறகு ஜாமீன் மனு தீர்ப்பு வழங்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் விலகிக் கொண்டனர். இதனால் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்பு கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணை நடைபெறுகிறது

http://www.maalaimalar.com

கருத்துகள் இல்லை: