செவ்வாய், 28 ஜூன், 2011

சென்னை- நாகர்கோவில் அரசு விரைவுப் பேருந்தில் தீ: 36 பயணிகள் உயிர்தப்பினர்

நாலாட்டின்புதூர்: சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று திடீர் என்று தீப்பிடித்தது. அதில் இருந்த 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று நேற்று மாலை சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. 36 பயணிகள் இருந்த அந்த பேருந்தை சாலமோன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

அந்த பேருந்து இன்று அதிகாலை கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏதோ கருகும் வாசனை வருவதாக உணர்ந்த டிரைவர் பேருந்தை நிறுத்தினார்.

கீழே இறங்கிச் சென்று பார்த்தபோது பேருந்தின் பின் டயர்களுக்கு நடுவே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே டிரைவர் பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து கீழே இறங்கச் செய்தார். இது குறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 36 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் வேறு பேருந்து மூலம் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இன்று அதிகாலை கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
http://thatstamil.oneindia.in/news/2011/06/28/tn-govt-bus-caught-fire-36-passengers-escaped-aid0128.html

கருத்துகள் இல்லை: