வியாழன், 30 ஜூன், 2011

இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் புதுடெல்லியில் சந்திப்பு - 3 நாட்கள் பேச்சுக்கள் தொடரும்

இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான மூன்று நாள் கலந்துரையாடல் புதுடெல்லியில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கான திட்டத்தின் ஒரு கட்டமாகவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி குணதிலக தலைமையிலான ஐந்து உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க புதுடெல்லி சென்றுள்ளது.

இந்தியத்தரப்புக் குழுவுக்கு இநதிய இராணுவத்தின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங் தலைமை தாங்குகிறார்.

நேற்று ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெறும்.

இந்தக் கலந்துரையாடலின் போது போர் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, கிளர்ச்சி முறியடிப்புத் தொடர்பாக கோட்பாடுகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் மிகநெருக்கமான உறவுகள் இருந்து வரும் நிலையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியமானதொரு மைல் கல்லாக அமையும் என்று இந்திய இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயற்பாடுகளின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரண்டு இராணுவங்களும் பல்வேறு துறைகளிலும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இருதரப்பும் ஆதாயம் பெறமுடியும் என்றும் அநத அறிக்கையில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு அணுகுமுறைகள் பலபரிமாணங்களைக் கொண்டதாக இருப்பதாகவும், இந்த அதிகாரிகள் மட்டக் கலந்துரையாமடல் பாதுகாப்பு ஒத்தழைப்புக்கான ஒரு வரைபடத்தை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தக் கலந்துரையாடலுக்காக புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குழு இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

எதிர்வரும் சனிக்கிழமை இவர்கள் கொழும்பு திரும்பவுள்ளதாகவும் புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.puthinappalakai.com/view.php?20110630104175

கருத்துகள் இல்லை: