சனி, 25 ஜூன், 2011

அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்கறிஞர்கள் மனு

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு அ.தி.மு.க., வழக்கறிஞர் எஸ்.முத்துராஜ் தலைமையில், 75 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைச்சராக இருந்த ராஜாவின் பங்கு, நம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரவையில் உள்ள தி.மு.க., அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியுள்ளார். தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போது, அவரும் சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார். தயாநிதி பெயரில் ஒதுக்கப்பட்ட தொலைபேசி இணைப்பை, அவரது குடும்ப "டிவி' பயன்படுத்தியதன் மூலம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தயாநிதிக்கு எதிராக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல், புலன் விசாரணை வெளிப்படையாக நடக்காது. தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியில் நீட்டித்தால், சாட்சிகளை கலைக்க நேரிடும். எனவே, அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி ராஜினாமா செய்யவில்லை என்றால், அவரை பிரதமர் நீக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: