வியாழன், 23 ஜூன், 2011

இலவச லேப்-டாப் தயாரிக்க 85 நிறுவனங்கள் போட்டி

: மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கான டெண்டர் பெற, 85 நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை, அதிகாரிகள் சந்தித்து அரசின் முடிவு குறித்து விளக்கினர்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "பிளஸ் 1, பிளஸ் டூ மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக, லேப்-டாப் வழங்கப்படும்' என அறிவித்தது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக கவர்னர் உரையில், "9 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதத்திலிருந்து இலவச லேப்-டாப் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. லேப்-டாப் டெண்டர் குறித்த அறிவிப்பு, ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. டெண்டர் விண்ணப்பங்கள் ஜூலை 11ம் தேதி வரை பெறப்படுகிறது. அன்றைக்கே டெண்டர் திறக்கப்பட்டு, நிறுவனங்கள் முடிவு செய்யப்படுகின்றன. டெண்டருக்கு முந்தைய கலந்தாய்வு ஆலோசனை கூட்டம், நேற்று எல்காட் அலுவலகத்தில் நடந்தது.எல்காட் நிர்வாக இயக்குனர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், விப்ரோ, எச்.சி.எல்., டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த, 85 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஒப்பந்த புள்ளி கோரும் நிறுவனம் தங்களுடைய மாதிரி லேப்-டாப்பை இந்த மாதத்திற்குள் அரசிடம் வழங்க வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் லேப்-டாப் தயாரிக்கும் திறன் கொண்ட நிறுவனத்திற்கு, லேப்-டாப் தயாரிக்கும் உரிமத்தை அரசு வழங்கும். ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள், தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர்கள் வைத்து மூன்று வருடத்திற்கு லேப்-டாப்பில் குறைபாடுகள் இருந்தால், அதை சரி செய்து கொடுக்க வேண்டும். இதன் எடை 2.700 கிலோவுக்கு அதிகம் இருக்க கூடாது. தொடர்ந்து மூன்று மணி நேரம் பேட்டரி மூலம் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.பென்டியம் டூயல் குரோர், 2 ஜி.பி.ராம், 320 ஹார்டு டிஸ்க், 14 இன்ச் திரை, விண்டோ 7 ஸ்டார்டர் ஆபரேட்டிங் சிஸ்டம், ஆன்டி வைரஸ் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள ஏதேனும் ஒரு சாப்ட்வேர் லேப்-டாப்பில் இருக்க வேண்டும் என, அரசு கூறியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு வழங்கும் இலவச லேப்-டாப்பில், மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ பாடத்திட்டங்கள் அடங்கிய சாப்ட்வேர் மற்றும் சிறந்த நிறுவனத்தின் ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வழங்க அனுமதிக்க வேண்டும் என, நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். எனவே, நிறுவனங்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என, கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: