வெள்ளி, 3 ஜூன், 2011

கைதிகளுக்கு உதவும் கனிமொழி!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி, சிறையில் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக அளவு முனைப்பு காட்டி சிறை வாழ்க்கை மனதை பாதிக்காத வகையில் நடந்துகொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

திகார் சிறையில் 6 ஆம் எண்ணில், 475 பெண் கைதிகளுடன் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள கனிமொழி,தொடர்ந்து மன உறுதியுடன் காணப்படுவதாகவும், சிறையில் சக கைதிகளுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், குறுகிய காலத்திலேயே அவர் அங்கு புகழ்பெற்றுவிட்டதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் மற்றவர்களுக்கு உதவுவது மற்றும் சிறைக்கைதிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அவற்றை சிறை நிர்வாகத்திடம் கொண்டு செல்வது போன்ற நடவடிக்கைகள் மூலம், சிறைவாழ்க்கை மனதளவில் பாதிக்காத வகையில் இருக்க கனிமொழி முயற்சிக்கிறார்.

சமீபத்தில் சிறை எண் 6-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.சக கைதிகள் இது குறித்து கனிமொழியிடம் தெரியப்படுத்தினர்.அவர் அப்பிரச்சனையை சிறை நிர்வாகத்திடம் கொண்டுசென்றார்.

இதனையடுத்து உடனடியாக அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையில் கனிமொழியைக் காண கைதிகள் காலையிலேயே கூடி விடுகின்றனர். அங்கிருந்து அவர் தினமும் நீதிமன்றத்துக்குச் செல்லும்போது வணக்கம் தெரிவித்து அவரை வழி அனுப்பி வைக்கின்றனர்.

மாலையில் சிறையில் இருந்து அவர் திரும்பும்போது அறை வாசலில் நின்று அவரை வரவேற்கின்றனர்.

கனிமொழி அவரது அறையில் படிப்பதிலும், டிவி பார்ப்பதிலும் நேரத்தை செலவிடுகிறார்.

வீட்டில் கொண்டுவரப்பட்ட உணவை சாப்பிட கனிமொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும்,அவ்வப்போது சிறை உணவையும் உண்டு ருசிபார்க்கிறார்.

கொசுவர்த்தி வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: