ஞாயிறு, 5 ஜூன், 2011

கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகை : வைகோ வலியுறுத்தல்

"முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என கேரள அரசு இப்போது அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னை என்பதால், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வைகோ கூறியுள்ளார்.


ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என கேரளாவின் புதிய முதல்வர் உம்மன் சாண்டி, நான்கு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக கூறி உள்ளார். பென்னி குக் கட்டிய முல்லை பெரியாறு அணையில், 999 ஆண்டுகளுக்கு பாசன உரிமை தமிழகம் பெற்றிருக்கிறது. கேரள அரசு கட்ட திட்டமிட்டிருக்கும் அணை பள்ளமான இடத்தில் அமைவதால், கேரள அரசு நினைத்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது. தென்பாண்டிச் சீமையில் ஐந்து மாவட்டங்கள் அடியோடு பாசன வசதியையும், குடிநீர் வசதியையும் இழக்கும் அபாயம் ஏற்படும்.தமிழகத்தில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள், பால், கால்நடைகள், கட்டுமானத்திற்கான மணல் எல்லாம் கேரளத்திற்கு செல்கிறது. தமிழகம் இதை தராவிடில், கேரளம் தாங்க முடியாத அவலத்துக்கு ஆளாகும். இதை உணராமல் தமிழகத்தின் தலையில், மண்ணைப்போட கேரளம் நினைத்தால், இரு மாநிலங்களுக்கும் இதனால் கேடுதான் விளையும்.


கேரள அரசின் அக்கிரம போக்கை தடுக்க வேண்டிய கடமையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்யவில்லை. கேரள அரசு, பென்னி குக் அணையில் கை வைக்கவோ, புதிய அணை கட்டவோ முனைந்தால், நிரந்தர பொருளாதார முற்றுகையை தமிழகம் ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன்.நம் மாநிலத்தின் முக்கிய வாழ்வாதார பிரச்னை என்பதால், கேரள அரசின் தவறான போக்கை தடுத்து நிறுத்தவும், மத்திய அரசுக்கு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தவும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் தமிழகத்தின் வாழ்வாதாரம் காக்க, ம.தி.மு.க., நேரடியாக கிளர்ச்சியில் ஈடுபடும்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.


http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: