வியாழன், 9 ஜூன், 2011

இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்களை, இலங்கை ராணுவத்திடம் கருணாநிதி தான் காட்டிக் கொடுத்தார். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிரிழந்ததற்கு, முந்தைய தி.மு.க., அரசு தான் காரணம்,'' என்று, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.


இலங்கைத் தமிழர்கள் மீது போர்க்குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க, ஐ.நா.,வை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கை மீது மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சட்டசபையில் நேற்று முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து முடிந்ததும்,


முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது:கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கை அதிபராக ராஜபக்ஷே பொறுப்பேற்றார். 2006ம் ஆண்டு மே மாதத்தில், தமிழகத்திலும் துரதிருஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கருணாநிதி தலைமையில், இங்கு மைனாரிட்டி அரசு பதவியேற்ற நிலையில், மத்தியிலும் தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, 2004 முதல் நடந்து வருகிறது. இந்த சூழலில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை, இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.


எல்லாம் தெரிந்த கருணாநிதி: கடந்த 2008ம் ஆண்டு ஆரம்பத்தில், இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு, அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம், ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும், இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர், இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது செய்திகள் வெளிவந்தன. அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதிக்கு, இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.இந்தியாவிடம் இருந்து, தனக்குத் தேவையான ராணுவ உதவிகளை பெற்றுக்கொண்ட இலங்கை ராணுவம், 2008ம் ஆண்டு இறுதியிலும், 2009ம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்சை அரசை, மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., வலியுறுத்த வேண்டும் என்றும், இதற்கு காங்கிரஸ் செவிசாய்க்கவில்லையெனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க., திரும்பப்பெற வேண்டும் என்றும், நான் பல முறை வலியுறுத்தினேன்.


கருணாநிதியின் நாடகங்கள்: ஆனால், கருணாநிதி அதை செய்யவில்லை. மாறாக, அனைத்துக்கட்சிக் கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, எம்.பி.,க்கள் ராஜினாமா அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக்கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என, பல்வேறு வகையான நாடகங்களை கருணாநிதி நடத்தினார்.இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென, "போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்' என்று அறிவித்து, கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். மதிய உணவு வேளை வந்ததும், 12 மணிக்கு, "விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை, இலங்கை அரசு முடித்துக்கொண்டு விட்டது' என்ற செய்தியை, ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு, அத்துடன் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு விட்டார். இதன்மூலம், உண்ணாவிரதம் எனும் அறப்போராட்டத்தை கேலிக்கூத்தாக்கினார் கருணாநிதி."போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது' என்ற, கருணாநிதியின் பேச்சைக் கேட்டு, பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளியே வந்தனர். இப்படி வெளிவந்த தமிழர்கள் மீது, இலங்கை ராணுவம் கொத்துக் கொத்தாக இடைவிடாமல் குண்டுகளை வீசி, ஈவு இரக்கமின்றி அவர்களை படுகொலை செய்தது.இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள், ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும், முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள், ராணுவப் படையினரின் கண் முன்பே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.


எம்.பி.,க்கள் குழுவின் பொய்: ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன் சிரித்துப்பேசி, விருந்துண்டு, பரிசுப்பொருட்களை பெற்று சென்னை திரும்பிய எம்.பி.,க்கள் குழுவோ, "இலங்கைத் தமிழர்கள் நலமாக இருக்கின்றனர்' என்று, உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவெனில், போரால் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் மறுவாழ்வு பெறாமல் அவதிபட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.


காட்டிக் கொடுத்தார் கருணாநிதி: "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது' என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி, இலங்கைத் தமிழர்களை, இலங்கை ராணுவத்திடம் கருணாநிதி காட்டிக்கொடுத்தார். "தமிழினப் பாதுகாவலர்' என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு, தமிழின படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும்போது, "உறவுபோல் இருந்து, குளவிபோல் கொட்டுவது' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இலங்கைத் தமிழர்கள் உயிரிழப்பதற்கு, முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டது.தி.மு.க., அரசின் சுயநலப்போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகினர். குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம், இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது. நிவாரணப் பொருட்கள் சென்றடைவதை, இலங்கை அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக, ஏராளமான தமிழர்கள் மரணம் அடைந்தனர். இதில், மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.


இலங்கையை வழிக்கு கொண்டு வர வழி: இந்த காரணங்களுக்காகத்தான், இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்திரராஜன் பேசும்போது,"பொருளாதார தடையை கொண்டுவர வண்டும் என்ற வரிகளை விலக்கிக்கொண்டால் என்ன?' என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். இதனால், தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தையும் அவர் கூறினார்.இப்போதே, இலங்கை அரசு, யாருக்கும் பணியவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு, சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா கூறினாலும், வேறு யார் கூறினாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை வழிக்கு கொண்டுவர ஒரே வழி, பொருளாதார தடைகள் தான். இது ஒரு தற்காலிகமான முறைதான். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசு மீது பொருளாதார தடையை கொண்டுவந்தால், குறுகிய காலத்திற்குள், நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும்; வேறு வழியில்லை.தீர்மானத்தில் பேசிய சில உறுப்பினர்கள், ஐ.நா., சபை, ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்துவிட்டதாக தெரிவித்தனர். அது தவறு. ஐ.நா., சபை, அதுபோல் அறிவிக்கவில்லை. ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன், ஒரு குழுவை அமைத்து, இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி, ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார். அக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்களை எல்லாம் தெரிவித்துவிட்டு,"இதை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும்' என்று தான் சொன்னது. ராஜபக்ஷேவையோ, மற்றவர்களையோ, போர்க் குற்றவாளிகளாக ஐ.நா., அறிவிக்கவில்லை.அதனால் தான், இந்த தீர்மானத்தில், போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என இந்திய அரசு பிரகடனப்படுத்த வேண்டும்; இதற்கு, ஐ.நா.,வை வலியுறுத்த வேண்டும் என்று, தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.எனவே, மனிதாபிமானமற்ற முறையில், ஈவு இரக்கமின்றி இலங்கைத் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு காரணமானவர்களை, போர்க் குற்றவாளிகள் என ஐ.நா., பிரகடனப்படுத்த, மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தி, அனைத்து குடியுரிமைகளையும் இலங்கை அரசு வழங்கும் வரை, மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.இதன்பின், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஈழத்தமிழரின் அழிவிற்கு இந்தியாவும் அதன் அங்கமான தமிழக அரசியல்வாதிக் அத்தனைபேரும் தான் காரணமாக இருந்தீர்கள். இப்போது மற்றவர் மேல் குற்றம் சுமத்தி தப்பிக்க நினைப்பது தவறு. சனநாயக நாட்டில் ஒரு எதிர்க்கட்சியின் பங்களிப்பு மிகப் பாரியது. அன்று இனவழிப்பு நடக்கும் போது ஜெ அவர்களெ நீங்கள் எதிர்க்ட்சித்தலைவி எனும் பொறுப்பில் இருந்தீர்கள்.இருந்தும் என்ன செய்தீர்கள்? நடந்தவை நடந்த துயரமாக இருக்கட்டும். ஈழத்தமிழரின் மனதில் விழுந்து விட்ட ஆள வடுவை யாராலும் மாற்றவும் முடியாது, ஆற்றவும் முடியாது. எனினும் இனியாவது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் ஒன்றினைந்து உங்கள் மத்திய அரசை அசைக்கப்பாருங்கள். உலகநாடுகள் இந்தியாவைத் தாண்டி எமது அவலத்தை பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே இன்று அனைத்தும் உங்கள் கையில். கருணாநிதியை நம்பி மிக மோசமாக ஏமாந்தோம். இனியாவது எம்மை எமது அவலத்தை கருத்திற் கொண்டு ஏமாற்றாமல் எமக்கு கைகொடுங்கள். எம்மை தூக்கி விடுங்கள். ஆண்டாண்டு காலம் ஓடித்திரிந்த நிலமெல்லாம் பறிகொடுத்து சிங்கள அரச பயங்கரவாதத்தின் காலடியில் சின்னபின்னப்பட்டு நிற்கின்றோம்.இன்று அவலப்பட்டு நிற்கும் எம்முடன் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற மனபலம் எமக்கு. மறைந்த எம் புரட்சித்தலைவர் ஆத்மா உங்களை வாழ்த்தும்.

பெயரில்லா சொன்னது…

ஈழத்தமிழரின் அழிவிற்கு இந்தியாவும் அதன் அங்கமான தமிழக அரசியல்வாதிக் அத்தனைபேரும் தான் காரணமாக இருந்தீர்கள். இப்போது மற்றவர் மேல் குற்றம் சுமத்தி தப்பிக்க நினைப்பது தவறு. சனநாயக நாட்டில் ஒரு எதிர்க்கட்சியின் பங்களிப்பு மிகப் பாரியது. அன்று இனவழிப்பு நடக்கும் போது ஜெ அவர்களெ நீங்கள் எதிர்க்ட்சித்தலைவி எனும் பொறுப்பில் இருந்தீர்கள்.இருந்தும் என்ன செய்தீர்கள்? நடந்தவை நடந்த துயரமாக இருக்கட்டும். ஈழத்தமிழரின் மனதில் விழுந்து விட்ட ஆள வடுவை யாராலும் மாற்றவும் முடியாது, ஆற்றவும் முடியாது. எனினும் இனியாவது அத்தனை தமிழக அரசியல்வாதிகளும் ஒன்றினைந்து உங்கள் மத்திய அரசை அசைக்கப்பாருங்கள். உலகநாடுகள் இந்தியாவைத் தாண்டி எமது அவலத்தை பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே இன்று அனைத்தும் உங்கள் கையில். கருணாநிதியை நம்பி மிக மோசமாக ஏமாந்தோம். இனியாவது எம்மை எமது அவலத்தை கருத்திற் கொண்டு ஏமாற்றாமல் எமக்கு கைகொடுங்கள். எம்மை தூக்கி விடுங்கள். ஆண்டாண்டு காலம் ஓடித்திரிந்த நிலமெல்லாம் பறிகொடுத்து சிங்கள அரச பயங்கரவாதத்தின் காலடியில் சின்னபின்னப்பட்டு நிற்கின்றோம்.இன்று அவலப்பட்டு நிற்கும் எம்முடன் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற மனபலம் எமக்கு. மறைந்த எம் புரட்சித்தலைவர் ஆத்மா உங்களை வாழ்த்தும்.