வியாழன், 30 ஜூன், 2011

சீனாவின் ராணுவ பலத்துடன் ஒப்பிடுகையில் நாம் சாதாரணம்- மன்மோகன் சிங்

டெல்லி: சீனாவின் ஆயுத பலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நேற்று நாளிதழ்களின் ஆசிரியர்களை சந்தித்துப் பேசினார் மன்மோகன் சிங். அப்போது அவர்களிடம் சீனாவின் ராணுவ பலம் குறித்தும் கூறினார். அதுகுறித்து மன்மோகன் கூறுகையில், நம்மை விட ராணுவ பலத்தில் சீனா பல மடங்கு முன்னணியில் உள்ளது. தற்போது அவர்களது கடற்படை மிகவும் அதி நவீனமாகியுள்ளது. விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறைய கொண்டுள்ளனர்.

நமது ராணுவ ரீதியிலான பலத்துடன் அவர்களை ஒப்பிட முடியாது. நாம் நிறைய பின்தங்கியுள்ளோம். இப்போதுதான் ஒவ்வொன்றாக ஆரம்பித்துக் கொண்டிருக்கிறோம். நமது படைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை யோசித்து வருகிறோம். கிட்டத்தட்ட பலப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக ராணுவத்தில் புதிதாக 2 டிவிஷன்களை இப்போதுதான் நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வேகம் மெதுவாகவே உள்ளது என்பது உண்மைதான்.

எனவே, நம்மிடம் உள்ள வசதிகளை வைத்து, விமானப்படைகளை ஸ்திரமாக வைத்துள்ளோம். எல்லைப் பகுதிகள் நமது விமானப்படையின் பாதுகாப்பான கரங்களுக்குள் உள்ளது. எல்லைப் புற சாலைகளை மேம்படுத்தவும் நாம் முயற்சித்து வருகிறோம். படிப்படியாக நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு என்பது கடந்த காலங்களை விட குறைந்துள்ளது என்பது உண்மைதான். இருப்பினும் அதற்காக நாம் தேவையான செலவுகளை குறைக்கவில்லை. பாதுகாப்பான நிதி ஒதுக்கீடும் நமக்கு மிகவும் அவசியம் என்பதை அரசு மறக்கவில்லை என்றார் பிரதமர்.

http://thatstamil.oneindia.in/news/2011/06/30/militarily-china-far-ahead-than-india-pm-manmohan-singh-aid0091.html

கருத்துகள் இல்லை: