ஞாயிறு, 26 ஜூன், 2011

ஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி என்று திமுக பேச்சாளர் வாகை முத்தழகன் பேசியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில், தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லை சங்கீதசபாவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் வாகை முத்தழகன் பேசுகையில்,

சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணம், கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்யாதது தான்.

மாவட்டத்தில் குறிப்பிட்ட ஜாதியினருக்குத் தான் கட்சியில் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்கள் இன்றைக்கு நெல்லை மாவட்ட அமைச்சரான இசக்கி சுப்பையாவின் பின்னால் அணிவகுத்து செல்கிறார்கள்.

சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் பிரபாகரன், கட்சிக்காரர்களை மதிப்பதில்லை. சங்கரன்கோவில் தங்கவேலுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. அவர், சங்கரன்கோவிலை விட்டு வேறு எங்கேயும் செல்வதே இல்லை. பின்பு எப்படி கட்சி வளரும்.

இளைஞர் அணி தளபதி என கூறும் ஸ்டாலினுக்கு 60 வயது ஆகிவிட்டது. கண் தெரியாதவர், காது கேட்காதவர்களை எல்லாம் இளைஞர் அணியில் வைத்திருந்தால் கட்சி எப்படி வளரும். சிறையில் இருக்கும் கனிமொழி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றார்.

அடுத்து பேசிய மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேசுகையில்

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியினர் நம்மை பார்த்து குறை கூறுகின்றனர். நாம் அந்த கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பதை கட்சித் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். இப்போது எடுக்கிற முடிவை கொஞ்சம் முன்பே எடுத்து காங்கிரசை கழற்றி இருக்கலாம் என்றார்.

கனிமொழியை உயர்த்தியும், மு.க.ஸ்டாலினை தாழ்த்தியும் பேசிய வாகை முத்தழகன் பேச்சால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: