திங்கள், 6 ஜூன், 2011

ஜெயலலிதாவுடன் மிலிந்த மொறகொட சந்திப்பு – சந்திரபாபு நாயுடு மூலம் நட்புறவுக்கு சிறிலங்கா முயற்சி

சிறிலங்கா தொடர்பாக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு தடையாக உள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன் உறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒருகட்டமாக சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு முதல்வருக்கு நெருக்கமான ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலமாகவே ஜெயலலிதாவை மிலிந்த மொறகொட சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு நெருக்கமான வர்த்தகப்புள்ளி ஒருவருடன் சிறப்பு ஜெட் விமானம் ஒன்றில் மிலிந்த மொறகொட ஹைதராபாத் சென்றிருந்தார்.

இது அவரது முறைப்படியான பயணமாக இல்லாத போதும், சந்திரபாபு நாயுடு ஊடாக சிறிலங்கா அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

இந்திய அரசியலில் ஜெயலலிதா முக்கியமான ஒருவராக மாறுவார் என்று சிறிலங்கா கருதுவதால், அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா முயற்சித்து வருகிறது.

மிலிந்த மொறகொடவின் அதிகாரபூர்வமற்ற இந்தப் பயணத்தின் போது தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இது மிலிந்த மொறகொடவின் அதிகாரபூர்வமற்ற பயணம் என்பதால், இந்தத் தகவலை சிறிலங்கா அரசோ அல்லது தமிழ்நாடு அரசோ உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: