வியாழன், 23 ஜூன், 2011

அழுது கொண்டே இருந்ததால் மைக்ரோவேவ் ஓவனில் போட்டு குழந்தையைக் கொன்ற பெண்

சாக்ரமென்டோ: அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில், அழுது கொண்டே இருந்த, பிறந்து 6 வாரமே ஆன தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டுக் கொலை செய்துள்ளார் அக்குழந்தையின் தாய்.

அவரது பெயர் கா யாங். 29 வயதாகும் இவருக்கு மிராபெல்லி தாவோ லோ என்ற பிறந்து 6 வாரமே ஆன பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டு கொடூரமாக கொலை செய்தார் கா யாங்.

அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அவர் மீது குழந்தையைத் தாக்கியது மற்றும் கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 17ம் தேதி இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் உடலை மீட்ட போலீஸார் குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மிக மோசமான அளவில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர். விவரிக்க முடியாத அளவுக்கு குழந்தையின் உடல் வெந்து போயிருந்ததாக அவர்கள் கூறினர்.

கொலை நடந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து தற்போது யாங் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி லாரா பெக் கூறுகையில், குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இந்த சம்பவத்தையும் சேர்த்து, இதுவரை அமெரிக்காவில் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்தமே மூன்றுதான் நடந்துள்ளதாம்.

குழந்தையைக் கொன்று பின்னர் மைக்ரோவேவ் ஓவனில் யாங் வைத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்வதற்கு முன்பு குழந்தையை அவர் தாறுமாறாக அடித்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. குழந்தை தொடர்ந்து அழுததால் அவர் இந்த வெறிச் செயலைச் செய்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து பெக் கூறுகையில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. சம்பவத்தன்று வீட்டில் வேறு யாரும் இல்லை. யாங் மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு மன நல பரிசோதனை நடத்துவதா என்பதை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: