வெள்ளி, 17 ஜூன், 2011

வீர வாஞ்சிநாதன்

மா. வீரபாண்டியன்

இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தென்னகத்தின் போராட்டக் களத்தை விலைமதிப்பு மிக்கதாக மாற்றிய நிகழ்ச்சி ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி. இன்றோடு 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது என்றாலும், இன்றும் பேசப்படும் நிகழ்ச்சியாக இது அமைந்துவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மிணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். ஆனால், அவரை வாஞ்சி என்றே அனைவரும் அழைத்துள்ளனர். செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த வாஞ்சி, திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரியில் படிக்கும்போது பொன்னம்மாளுடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து, புனலூர் வனத்துறையில் பணியாற்றினார் வாஞ்சி. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சத்தை அடைந்திருந்த நேரம்.
அந்த நேரத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட புரட்சியாளர்களுக்கு, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் இருந்து உதவிகள் கிடைத்து வந்தன. அங்குள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வாஞ்சி, அரசுப் பணியில் இருந்து விலகி, புரட்சிப் பாதைக்கு மாறினார். நண்பர்களுடன் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்.
புதுவையில் புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் வீட்டில் வாஞ்சி தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்தித்துள்ளார். இந்தியர்கள் நடத்தி வந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது வெள்ளையர் அரசாங்கம். சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தப் பாடுபட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் துரையைக் கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.
1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிட அறை நோக்கி ஓடினார். அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.
வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி - மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள்.

http://dinamani.com/

2 கருத்துகள்:

சங்கர் சொன்னது…

இப்படியும் சொல்றாங்கலே!!!
http://viduthalai.in/new/e-paper/11892.html

பெயரில்லா சொன்னது…

வாஞ்சிநாதன் என்ற சனாதன வெறிபிடித்த பார்ப் பானால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நூறாவது ஆண்டு நாள் இந்நாள் (17-6-1911).

மணியாச்சி ரயில் நிலையத்தில் இந்தக் குரூரம் நடந்தது. இந்தக் கொலை யின் பின்னணி என்ன? சுதந்திர தாகமா? வருணா சிரம வெறியா?

ஆய்வுகள் தேவையில்லை - ஆஷை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் சுடுவதற்கு முன் தன் சட்டைப் பையில் எழுதி வைத்திருந்த கடிதம் அதற்கான ஆவணமாகும்.

ஆங்கில சத்துருக் கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந் திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ் ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத் தில், கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.

அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மத ராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கி றோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர் களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தா னத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.

இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்


இந்தக் கடிதத்தில் இந்திய சுதந்திரப் போராட் டம் என்ற உணர்வு துடித்து நிற்கிறதா? ஆரிய பார்ப் பனர்களின் சனாதன தர்மம் என்ற வெறி சூலத்தைத் தூக்கிக் கொண்டு தாண்ட வமாடுகிறதா?

கோ மாமிசம் தின்னக் கூடிய மிலேச்சன் ஜார்ஜ் பஞ்சமன் என்ற சொற்களைத் துருவித் துருவிப் பார்க் கட்டும் எவரும்.

மிலேச்சன் என்று ஆரியர் என்று யாரைக் குறித்துச் சொல்லுவர்? பஞ்சமன் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?

பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கடை கோடியில் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்களைத்தானே?

அந்தச் சொற்களை ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடப் பயன்படுத்துவதைக் காண வேண்டும். இப்படிப்பட்ட ஜாதி வெறியனை - இந்து மதக் கொடியவனை - ஸனாதன சீக்குக் கொண்டவனை சுதந்திரப் போராட்ட வீரன் என்று சொல்லுவதும், படு கொலை செய்யப்பட்ட இட மான ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதன் பெயரைச் சூட்டுவதும் எந்த ஒழுக் கத்தைச் சேர்ந்தது?

பார்ப்பான் என்றால் பாஷாணமும் பஞ்சாமிர்தம் தானோ!