வெள்ளி, 24 ஜூன், 2011

கடாபிக்கு எதிரான போர்க்குற்ற ஆதாரத்தை விட மகிந்தவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை! -

விடுதலைப் புலிகளை அழித்தொழித்த 2009 ம் ஆண்டுக் காலப் பகுதியில் போர்க் குற்றங்கள் இடம் பெற்றமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என கொழும்பு மறுத்து வருவதில் எவ்வித உண்மைகளும் இல்லை என ’The Age' எனும் அவுஸ்ரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்டு – ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் புறக்கணிக்க முடியாதவை. உண்மையில் கடாபிக்கு எதிரான வழக்கில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ள ஆதாரங்களிலும் பார்க்க சிறிலங்காவிற்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை என அந்த இதழில் Eric Ellis எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விலகி மக்களை அரசாங்கங்கள் கொன்றழிக்கும்போது உலகின் கடப்பாடுகள் என்ன? போர்க் குற்றங்களை மேற்கொண்ட அரச தலைவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை வழங்குமாறு அனைத்துலக சமூகம் நிர்ப்பந்திக்கப்பட வேண்டுமெனில், இழைக்கப்பட்ட கொடுமை எந்தளவு மோசமானதாக இருந்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Eric Ellis ஆசியப் பிராந்திய நிலைமைகளை முன்னிறுத்தி எழுதி வரும் ஊடகவியலாளர். 2001 முதல் 2008 வரை Fortune இதழின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளராக இலங்கைத் தீவின் விவகாரங்கள் பற்றி எழுதி வந்துள்ளார்.
Eric Ellis எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தினை இங்கே தருகின்றோம்.
1990களில் நடந்தேறிய பொஸ்னியப் போர் மீறல்கள் தொடர்பாக முரண் கருத்துக்கள் நிலவவில்லை. யூதர்கள் மீதான இன அழிப்புக்கு அடுத்ததாக ஐரோப்பா சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை என Srebrenica படுகொலைகள் குறிப்பிடப்படுகின்றன.
இவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அனுப்பப்பட்ட அனைத்துலக அமைதிப்படைகள் இப் படுகொலைகளுக்குச் சாட்சிகளாக நின்றன. இதற்குப் பொறுப்பான Ratko Mladic மற்றும் Radovan Karadzic ஆகிய இரண்டு சேர்பியத் தலைவர்களுக்கு எதிராக Haag நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறுகின்றன. இவர்களுக்கு எதிராக தேவையான அனைத்து சாட்சியங்களும் உள்ளன.
1994இல் Rwanda வில் பாரிய இன அழிப்பு நடந்தேறியது - கூட்று இன (Hutu) அரசாங்கத்தின் ஆதரவோடு திட்டமிடப்பட்ட முறையில் ஒரு மில்லியன் வரையான ருற்சி இன (Tutsi) மக்கள் கொன்றழிக்கப்பட்டனர். ஐ.நாவின் குற்றவியல் நீதிமன்றத்தினால் 100 வரையானவர்கள் மீது இன அழிப்புக் குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டார்பர் பிரதேச மக்கள் மீதான இன அழிப்பிற்காக சூடானின் அரச தலைவர் உமார் அல் பஸீர் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முதன் முதலில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்ட, பதவியிலுள்ள அரச தலைவர் இவரே.
இன்று எண்ணெய் வளம் மிக்க லிபியா மீது ஆட்லாண்டிக் நாடுகளும் அவர்களது அரபு தேச நட்பு சக்திகளும் முகம்மர் கடாபியின் திரிப்போலி (லிபிய தலைநகர்) மீது குண்டுகளைப் போட்டு, கடாபி தனது சொந்த மக்களை அழிப்பதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.
ஆனால் சிங்கள பெரும்பான்மை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் கொடுமையான முடிவினை எட்டிய 30 ஆண்டு காலப் போரின் இறுதிக்கட்டம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு என்ன ஆயிற்று?
2009இன் ஏப்ரல் - மே காலப் பகுதிகளில் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் பாதுகாப்பானதென்று நம்பப்பட்ட கடற்கரை ஒன்றுக்கு நகர்த்தப்பட்டனர். அவர்கள் புலிப்படையைச் சேர்ந்தவர்கள் அல்ல. அப்பாவிப் பொதுமக்கள். 'போரற்ற பகுதி' என அவர்களுக்கும் உலகத்திற்கும் கொழும்பு அரசாங்கம் உறுதியளித்த பகுதிகளில் எறிகணைத் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
'இது சிறிலங்காவின் Srebrenica என Gordon Weiss குறிப்பிட்டார். அவர் போர்க் காலத்திலும் அதன் முடிவுக்குப் பிற்பட்ட சில காலத்திலும் சிறிலங்காவிற்கான ஐ.நாவின் பேச்சாளராக கடமையாற்றிய அவுஸ்திரேலியர். தற்பொழுது ஐ.நாவிலிருந்து விலகி பிரித்தானியாவின் நியுகாஸ்ரலில் வசித்து வரும் அவர் ’The Cage' என்ற தலைப்பிலமைந்த நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தீவின் போர் பற்றியும் சிறிலங்கா படைகளால் கொடூரங்கள் இழைக்கப்பட்டபோது, கொழும்பு அதிகார மையம் தொடர்பில் மௌனமாயிருந்ததன் மூலம் ஐ.நா வழங்கிய ஒப்புதல் பற்றியும் அவரது நூல் விமர்சிக்கின்றது.
ஆட்புல இறையாண்மையை மீள் நிலைநாட்டுவது தொடர்பான சிறிலங்காவின் உரிமை பற்றிய எந்தவொரு கருத்துகளையும் Weiss முன்வைக்கவில்லை. இந்தக் கொடுங்கொலைகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பவை பற்றியதே அவர் முன்வைக்கும்; விடயங்களாகும். விடுதலைப் புலிகள் இல்லாத சூழல் உலகத்திற்கு நல்லதென்று Weiss கூறுவது பொருத்தமுடைய கருத்தாகும். அவர்கள் சிறார்களைப் படையில் சேர்த்தார்கள். கைதுசெய்யப்படும்போது சயனற் குப்பிகளைக் கடிப்பதற்கு மூளைச்சலவை செய்யப்பட்டனர். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டனர். 'விடுதலைக்கான நிதி' என்ற பேரில் புலம் பெயர் மக்களிடமிருந்து தமது போருக்கு நிதி கோரினர்.
2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழித்த காலத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என கொழும்பு மறுத்து வருகின்றது. ஆனால் அது உண்மை இல்லை. உறுதிப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் புறக்கணிக்க முடியாதவை. உண்மையில் கடாபிக்கு எதிரான வழக்கில் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் பகிரங்கப்படுத்தியுள்ள ஆதாரங்களிலும் பார்க்க இவை வலுவானவை. இன்றைய ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில் இவை ஆச்சரியத்திற்குரியவை அல்ல. பெரும்பான்மையான காணொளி ஆதாரங்கள் சிறிலங்கா படையினர் தம்மைத் தாமே படம்பிடித்தவை.
கடந்த வாரம் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி, இதுவரை வெளிவராத மிக வலுவான ஆதாரங்களைக் கொண்ட, 'இலங்கையின் கொலைக் களங்கள்' என்ற ஆவணப்படத்தினை ஒளிபரப்பியது. இது கவனக் குவிப்பினை ஏற்படுத்துகின்ற ஊடகவியல் பணியாகும். சிறிலங்கா படைகளினால் தமிழ்ப் பொதுமக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட அருவருக்கத்தக்க கொடூரங்களின் சாட்சியங்களை நுண்ணிய வகையில் எடுத்துக் காட்டுகின்றது.
திட்டமிடப்பட்ட படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், சரணடைந்தவர்கள் மற்றும் அப்பாவிகள் மீதான உடல்வதைகள் மற்றும் 'போரற்ற பகுதிகளில்' அமைந்திருந்த மருத்துவமனைகளை இலக்கு வைத்த எறிகணைத் தாக்குததல்கள் அதில் பதிவாகியுள்ளன. செஞ்சிலுவைச் சங்கத்தினால் இவை தொடர்பாக கொழும்புக்கு அறிவிக்கப்பட்டிருந்தபோதும் மருத்துவமனைகள் இலக்கு வைக்கப்பட்டன.
ஆவணப்படத்தினைப் பின்னிரவுப் பொழுதில் ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சி, ஆவணப்படத்தின் மோசமான உள்ளடக்கம் தொடர்பாக எச்சரித்திருந்தது. ஆனால் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட கொழும்பு அரசாங்கம் நடந்தவற்றை மறுத்து வரும் புறநிலையில், வரலாற்றிற்கு சமர்ப்பணமாக அதை ஒளிபரப்புவதாக சனல் 4 தெரிவித்திருந்தது.
ஆவணப்படம் பரந்து பட்ட அளவிற்கு You Tube ஊடாக பரவியது. இணையத்தளம் ஊடாக முழு உலகமும் காண சனல் 4 வழி செய்தது. ஆவணப்படத்தினைத் தனது பங்கிற்கு கொழும்பு கண்டித்திருந்தது. அத்தோடு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி, புலம் பெயர் புலிகளாலும் மேற்கின் ஆதரவாளர்களாலும் போலியாகத் உருவாக்கப்பட்டவை எனவும் கொழும்பு அறிவித்தது.
போர்க் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதை விடுத்து, மேற்குலகம் தலைமையிலான உலக பயங்கரவாதத்திற்கெதிரான போருக்காக தன்னை வாழ்த்துமாறு சிறிலங்கா வலியுறுத்துகின்றது. அதில் முற்றுமுழுதாக வெற்றியடைந்த தரப்பாக சிறிலங்கா தன்னைக் கருதுகின்றது. தற்பொழுது பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கிளர்ச்சி எதிர்ப்பு மூலோபாயங்கள் தொடர்பாக பாடங்களையும் நடாத்தி வருகின்றது.
மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் அடங்கிய தெரிவு செய்யப்பட்ட சர்வாதிகார ஆட்சியதிகாரம் (elected dictatorship) அசைக்க முடியாததாக உள்ளது. ஐ.நாவில் சிறிலங்காவைச் சீனா பாதுகாத்து வருகின்றது. ஹம்பாந்தோட்;ட துறைமுக அபிவிருத்தியில் 3000 மில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்துள்ளது.
வெற்றி இனிமையானது. அந்த வகையில் சிறிலங்கா அரசாங்கம் இப்பொழுது பாதுகாப்பாகவுள்ளது. ஆனால் பல வகைகளில் முன்னைய காலங்களை விட கேடுகள் நிறைந்த இடமாக உள்ளது.
ஆனால் இவற்றின் தார்மீக விலை என்ன? 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் 40 000 மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா கணக்கிட்டுள்ளது. Gordon Weiss போன்றவர்கள் கேட்பது போல், இந்தோனேசியாவில் தமது கால்நடைகளுக்கு என்ன நேர்கின்றது என்பதையிட்டு சீற்றமடையும் அவுஸ்ரேலியர்கள் ஏன் இலங்கையின் கொலைக் களங்களில் இத்தனை ஆயிரம் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அக்கறை கொள்வதில்லை?
இவ்வாறு இக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.ponguthamil.com

கருத்துகள் இல்லை: