வெள்ளி, 3 ஜூன், 2011

அரசு கேபிள் டிவியை அதே பர்னாலா வாயால் அறிவிக்க வைத்த ஜெயலலிதா

கேபிள் டிவி அரசுடமையாக்கப்படுவதை முடக்க எந்த பர்னாலாவின் உதவியை திமுக தலைவர் கருணாநிதி கடந்த அதிமுக ஆட்சியின்போது நாடினாரோ அதே பர்னாலா வாயாலேயே மீண்டும் அரசு கேபிள் டிவி அறிவிப்பை வெளியிட வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இன்றைய ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளில் ஒன்று கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும் என்பது. இதைத்தான் தமிழக மக்கள் நீண்ட காலமாகவே எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 100 ரூபாய் மற்ற ஊர்களில் இஷ்டத்திற்குக் கட்டணம் என்பதுதான் தமிழக மக்களின் கேபிள் டிவி தலையெழுத்தாக உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் இஷ்டத்திற்கு கேபிள் டிவி கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இதனால் அரசுக்கும் லாபமில்லை, பொதுமக்களுக்கும் லாபமில்லை. மாறாக எம்எஸ்ஓக்கள் எனப்படும் சுமங்கலி கேபிள் விஷன் போன்றோர்களுக்குத்தான் கொள்ளை லாபமாக உள்ளது. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் கூட இதனால் பெரும் பயன் கிடைத்து விடவில்லை.

மேலும், இலவச சானல்களை மட்டுமே பெரும்பாலும் தருகிறார்கள். கட்டணச் சானல்களைக் கேட்டால் மாதக் கட்டணம் மேலும் தாறுமாறாகும்.

இந்த அவல நிலைக்கு முடிவு கட்டவும், தனி ஒரு நிறுவனம் மட்டும் லாபம் சம்பாதிப்பதைத் தடுக்கவும்தான் கேபிள் டிவியை அரசுடமையாக்கி சட்டம் இயற்றியது கடந்த அதிமுக அரசு. அந்த ஆட்சியின் கடைசிக்காலத்தில் இந்த திட்டம் அமலானது. அதுதொடர்பாக அவசரச் சட்டத்தையும் ஜெயலலிதா அரசு பிறப்பித்தது.

இதையடுத்து பதறியடித்த திமுக தலைவர் கருணாநிதி, தனது பேரன் தயாநிதி மாறனுடன் ஆளுநர் மாளிகைக்கு ஓடினார். அப்போது ஆளுநராக இருந்தவரும் பர்னாலாதான். அவரைப் பார்த்து அவசரச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

ஆளுநரும் அவசரச் சட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்தார். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது.

ஒரு கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்துக்கும் சன் டிவி சகோதரர்களான தயாநிதி-கலாநிதி மாறன்களுக்கும் இடையே சண்டை வந்துவிட, அரசு கேபிள் டிவி கழகம் என்ற ஒன்றை உருவாக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. அதாவது சுமங்கலி கேபிள் விஷனை முடக்க அந்த முயற்சியில் இறங்கினார் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி.

பின்னர் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட அரசு கேபிள் டிவி கழகம், அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக வாங்கப்பட்ட அதி நவீன சாதனங்கள் பாழாகி பல கோடி ரூபாய் வீணாகிப் போனதுதான் மிச்சம்.

இந்த நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி வந்துள்ள நிலையி்ல் அரசு கேபிளை கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா. எந்த பர்னாலாவால் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் முடக்கப்பட்டதோ, அதே பர்னாலா வாயாலேயே அரசு கேபிள் டிவி திட்டத்தை அறிவிக்க வைத்துள்ளார் ஜெயலலிதா.

ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அறிவிப்புகள்:

- தமிழ்நாட்டில் கலைநயமிக்க கட்டிடங்கள், புராதனச் சின்னங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் 60 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும், 40 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கக்கூடிய வகையில் சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

- முதல்வர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளபடி மீதம் உள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் அடுத்த ஒன்றரை ஆண்டில் இந்த அரசால் நிறைவேற்றப்படும்.

- கிராமப்புறங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, 24 மணி நேர மருத்துவ வசதி, தரமான கல்வி, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய சாலைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த அரசு பாடுபடும்.

- நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகள் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்படும். - சோதனை அடிப்படையில் கிராமப்புறங்களில் சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தும் தெருவிளக்குகள் அமைக்க இந்த அரசு முயற்சி மேற்கொள்ளும்.

- சூரிய எரிசக்தியைப் பயன்படுத்துவதில் ஆரம்பக்கட்ட மூலதனச் செலவு தற்பொழுது அதிகமாக இருந்தாலும் வருங்காலத்தில் தொழில் நுட்ப மேம்பாடு, பயன்பாட்டு அளவில் உயர்வு ஆகியவற்றால் ஒரு அலகுக்கான மூலதனச் செலவு குறைந்து தெரு விளக்குகள் மற்றும் பிற சமுதாய எரிசக்தி தேவைகளுக்கு இது ஒரு நிரந்தரமான மாற்று தீர்வாக அமையும் என இந்த அரசு கருதுகிறது.

- மின்சாரம், சாலை வசதி, நகர்ப்புற கட்டமைப்புகள், வீட்டு வசதி ஆகிய உட் கட்டமைப்புகளில் உள்ள குறைவைப்போக்க தொடர்ந்து திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி தமிழ்நாடு நீட்டித்த பொருளாதார வளர்ச்சியைப் பெற வழிவகை செய்யப்படும்.

- இத்தகைய பணிகளை மேற்கொள்ள கணிசமான நிதி தேவைப்படும் நிலையில் மாநில அரசிடம் உள்ள வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரத்தைக் கொண்டு மட்டும் திட்டங்களை செயல்படுத்த இயலாது. எனவே, நிதி ஆதாரத்தை திரட்டுவதுடன், முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையான அணுகுமுறை பின்பற்றப்படும்.

அரசு தனியார் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியை இந்த அரசு செயல்படுத்தும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: