சனி, 25 ஜூன், 2011

சோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான் : தமிழச்சி தங்கபாண்டியன்

திருப்பூர் : ""சோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான்,'' என, திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார். தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், திருப்பூர் அரிசிக்கடை வீதியில், நடந்தது. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: தி.மு.க.,வுக்கு தோல்வி என்பது புதிது அல்ல. இதுவரை எத்தனையோ வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது. சோதனைகளும், தோல்விகளும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான்.
இலங்கையில் நடந்த இன படுகொலைக்கு காரணமான ராஜபக்ஷேவை கண்டித்தும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தையும் தி.மு.க., ஆதரிக்கிறது; அதே நேரத்தில், பல ஆண்டுக்கு முன்பே இலங்கையில் நடக்கும் தமிழர் படுகொலைகளுக்கு தி.மு.க., கண்டனம் தெரிவித்து, எதிர்ப்பை காட்டி வந்துள்ளது.
கல்வியில் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதற்காக கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதால், அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்காமல் போகும்; ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வாய்ப்பின்றி போகும்; கல்வியில் தேவையான மாற்றங்கள் செய்யலாம்; ஆனால், அடிப்படையை மாற்றக் கூடாது, என்றார்.
"பார்வையாளராக இருப்போம்' முன்னாள் அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ""அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் சாயக்கழிவுநீர் பிரச்னை தீர்ந்து, சாய ஆலைகள் செயல்படும் என்றனர்; எட்டு அமைச்சர்கள் கூடி பேசியதை தவிர, வேறு எதுவும் பெரிதாய் நடந்து விடவில்லை. இவ்விஷயத்தை பொறுத்தவரை, போராட்டத்தில் இறங்காமல், ஒரு பார்வையாளராக மட்டுமே இருப்போம். இதை அரசியலாக்க விரும்பவில்லை. பிரச்னையை தீர்க்க அரசுக்கு போதிய அவகாசமும் தருவோம்.
""பொய் பிரசாரத்தை நம்பி தேர்தலில் மக்கள் ஏமாந்து விட்டனர். அதற்கான பலனை அனுபவிக்கின்றனர். மக்களுக்கு தருவதற்காக வாங்கிய ஒரு லட்சம் "டிவி'யை, அனாதை இல்லங்களுக்கு தருகிறார்களாம்; மக்களையும் அனாதை இல்லங்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும்,'' என்றார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: