சனி, 18 ஜூன், 2011

கனிமொழி ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் விலகல்

புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள கனிமொழியின் ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.கனிமொழி ஜாமின் மனு மீதான விசாரணை, வரும் 20ம் தேதி (திங்கள் கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் வருகிறது. இதை நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. இந்நிலையில், இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கும்படி, இருவரும் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியாவிடம் கேட்டுக் கொண்டனர். விலகலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.இதன் காரணமாக, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சிறப்பு அமர்வாக, கனிமொழி ஜாமின் மனுவை விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்கும் பெஞ்சில், நீதிபதி ஜி.எஸ்.சிங்வி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழியையும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாரையும் ஜாமினில் விடுவிக்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டி.பி.ரியாலிட்டி நிறுவனம், அதற்கு பிரதிபலனாக, தன் துணை நிறுவனமான சினியுக் மூலம், 214 கோடி ரூபாயை கலைஞர் "டிவி'க்கு கொடுத்தது. இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலைஞர் "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 20ம் தேதி, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். கனிமொழியும், சரத்குமாரும் ஜாமின் கோரி, பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் மற்றும் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இவர்களின் மனுக்கள், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுவாதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன், 13ம் தேதி விசாரணைக்கு வந்தன.கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக ஆஜரான மூத்த வக்கீல்கள் அல்டாப் அகமது மற்றும் சுஷில் குமார் ஜெயின் ஆகியோர், "கனிமொழியோ, சரத்குமாரோ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு எதையும் பெறவில்லை. 214 கோடி ரூபாய் கடன் தான் வாங்கியுள்ளனர். அதுவும் திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது. சி.பி.ஐ., முதலில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி மற்றும் சரத்குமாரின் பெயர் இல்லை' என்றனர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "ஊழல் என்பது மிக மோசமான மனித உரிமை மீறல். "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடியில், கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்ட, 214 கோடி ரூபாய் எங்கே சென்றது. இது தொடர்பாகவும், கனிமொழியின் ஜாமின் மனு தொடர்பாகவும், வரும் 20ம் தேதிக்குள் சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சி.பி.ஐ., சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்ட 214 கோடி ரூபாய் லஞ்ச பணம் தான். இது கடனாக பெறப்பட்டது அல்ல. கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்களாக செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது. இவர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை, சிறப்பு கோர்ட்டும், ஐகோர்ட்டும் பல்வேறு ஆதார ஆவணங்களையும், இதர அம்சங்களையும் கவனமாக அலசி ஆராய்ந்து ஜாமின் வழங்க மறுத்து விட்டன. இதை கருத்தில் கொண்டு, "2ஜி' ஊழல் வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் இவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை கலைத்து விடுவர்; ஆதாரங்களை அழித்து விடுவர். இவ்வாறு சி.பி.ஐ., பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: