வியாழன், 9 ஜூன், 2011

இலங்கை தமிழர்களை அழித்த பெருமை தி.மு.க.,வையே சாரும்: விஜயகாந்த் பேச்சு

இலங்கைத் தமிழர்களை அழித்த பெருமை, முந்தைய, தி.மு.க., ஆட்சியாளர்களையே சாரும்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.


சட்டசபையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்பான தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


துரைமுருகன் - தி.மு.க: தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கிறோம். இப்பிரச்னை, நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கின்றன. இதில், நீங்கள் என்ன செய்தீர்கள்; நாங்கள் என்ன செய்தோம் என்று ஆராயத் தேவையில்லை.இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வர வேண்டும் என்றாலும் சரி, தூதரக உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றாலும் சரி, இலங்கை மீது மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம். இப்பிரச்னையில், மனமாச்சரியம் இல்லாமல், அனைவரும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.


விஜயகாந்த் - எதிர்க்கட்சித் தலைவர்: இப்பிரச்னை தொடர்பாக, முந்தைய, தி.மு.க., ஆட்சியில், இதே சபையில் விவாதிக்கப்பட்டது. இந்த பிரச்னைக்காக, அப்போதைய முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். சிறிது நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, "இலங்கையில் சண்டை நின்றுவிட்டது' என்றார். மறுநாள், "மழைவிட்டும் தூவானம் விடவில்லை' என்றார். இது எப்படி சாத்தியம்? அப்பாவி இலங்கைத் தமிழர்களை அழித்த பெருமை, முந்தைய, தி.மு.க., ஆட்சியாளர்களையே சாரும். இலங்கை அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஒரு பகுதியில், எட்டு லட்சம் தமிழர்களை காணவில்லை என்றனர்.அதன்பின், நான்கு லட்சம் பேர் இருந்ததாகவும், அவர்களில், 40 ஆயிரம் பேர், முள்வேலியில் அடைத்து கொன்று குவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மீதி தமிழ் மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரம், காவிரி பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளிலும், தி.மு.க., சரிவர செயல்படவில்லை.


(இவ்வாறு விஜயகாந்த் பேசியதற்கு, தி.மு.க., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோஷம் போட்டனர். விஜயகாந்த் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு அளிக்குமாறு, துரைமுருகன் கேட்டார். அனுமதி தராததால், அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.)


பழ.கருப்பையா - அ.தி.மு.க: இலங்கைத் தமிழர்கள் பிரச்னை மட்டுமில்லாமல், தமிழக மீனவர்கள் விஷயத்திலும், தி.மு.க., அரசு சரிவர செயல்படவில்லை. தி.மு.க., ஆட்சியில் தான், இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வர், அப்போது முதல்வர் பதவிக் கூட இல்லாத நிலையில், தனியொரு பெண்ணாக இருந்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.


முதல்வர் ஜெயலலிதா: தனியொரு பெண்ணாக இருந்து, நான் வழக்கு தொடரவில்லை. அ.தி.மு.க.,வின் ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பாகத் தான், நான் வழக்கு தொடர்ந்தேன்.


பழ.கருப்பையா: அ.தி.மு.க., சார்பில் மட்டுமல்ல, ஏழு கோடி மக்களின் சார்பாகத் தான், வழக்கு தொடர்ந்தீர்கள். தி.மு.க., அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டதாக, புலம்புகின்றனர். நிறுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம், அவர்கள் குடும்பத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்கள் என்பதால் தான், இப்படி புலம்புகின்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.

http://www.dinamalar.com


கருத்துகள் இல்லை: