வியாழன், 2 ஜூன், 2011

சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜயலட்சுமி வீட்டில் போலீஸ் விசாரணை

இயக்குநர் மற்றும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் மீது கொடுத்துள்ள மோசடிப் புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியின் வீட்டில் இன்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

இயக்குநர் சீமான் தன்னை 3 ஆண்டுகள் காதலித்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறி சீமான் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்றுகாலை சாலிகிராமத்தில் உள்ள விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற போலீஸ் குழுவினர், அங்குள்ள விஜயலட்சுமியின் குடும்பத்தாரிடம் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

ரூ. 5 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும்-சீமான் வக்கீல்

இதற்கிடையே, சீமான் மீது அவதூறாகப் புகார் கொடுத்துள்ள நடிகை விஜயலட்சுமி மீது ரூ. 5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் துயரங்களை கண்டு மன வேதனை அடைந்த சீமான், அதனை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சீமான் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார்.இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு சென்றார். சுமார் ஓராண்டிற்கு மேலாக சிறையிலேயே அவர் காலத்தை கடத்தி உள்ளார்.

இந்த நிலையில் சீமான் காதல் கத்திரிக்காய் செய்யும் மனநிலையில் இருந்ததில்லை. விஜயலட்சுமியை சீமான் உண்மையில் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள மறுத்திருந்தால் முதலில் விஜயலட்சுமி என்னிடமோ, சீமானின் நல விரும்பிகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது அவரது பெற்றோரிடமோ புகார் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து போலீசாரிடம் சென்று சீமான் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே சீமானுக்கு எதிராக திட்டமிட்டு யாருடைய தூண்டுதலின் பேரில் விஜயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வலியுறுத்தி உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் சீமான் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்கும் வகையில் மத்திய உளவுத்துறையினரும், தேர்தலில் சீமானின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் விரைவில் முறியடிப்போம். சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் கூறிய விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: