சனி, 25 ஜூன், 2011

ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை

தமிழக அளவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி, முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "தமிழக அளவில் கிராமப்புற ஏழைகள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள விவசாய குடும்பங்களுக்கு, நான்கு ஆடுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு குடும்பத்திற்கு, ஒரு கறவை மாடு வீதம், 60 ஆயிரம் மாடுகள் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே முதல்வர் ஜெயலலிதா, பெண்களின் தாலிக்கு தங்கம், இலவச அரிசு உட்பட ஏழு திட்டங்களில் அதிரடியாக கையெழுத்திட்டார். "அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படும்' என்றார். இலவச லேப்-டாப், கிரைண்டர், மிக்சி போன்றவற்றை பயனாளிகளுக்கு அளிப்பது தொடர்பாக, துறை செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்த மிகப் பெரிய இலவச திட்டமான ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை, முதல்வர் கையில் எடுத்துள்ளார். அவற்றை பயனாளிகளுக்கு எப்படி வழங்குவது, பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பவை தொடர்பான சாத்தியக்கூறுகளை, அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி, கால் நடைத்துறை அமைச்சர் கருப்பசாமி மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் அரசு செயலர்கள் பங்கேற்று, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கருத்துகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கிராமங்களில் பலர் ஆடு, மாடுகள் வைத்துள்ளனர். இத்திட்டத்திற்கான பயனாளிகள் பட்டியல் தயாராகும் போது, அவர்களது பெயர் சேர்க்கப்படுமா, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் ஆடு, மாடு இல்லாத ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பெயர் திட்டத்தில் இடம் பெறுமா போன்ற கேள்விகள் எழுந்து உள்ளன. குடும்பத்திற்கு ஒரு கறவை மாடு வீதம், 60 ஆயிரம் கறவை மாடுகளும், குடும்பத்திற்கு நான்கு ஆடுகள் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கறவை மாடுகள் தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக, தனியாரிடம் இருந்து வாங்க வாய்ப்பில்லை. கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் மாடுகள் மற்றும் ஆடுகளை அதிகளவில் உற்பத்தி செய்தால் மட்டும் இது சாத்தியமாகும் என தெரிகிறது. இப்படி பல்வேறு சாத்தியக் கூறுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆடு, மாடு வழங்கும் திட்டம் நூறு சதவீதம் செயல்படுத்தப்படும். அதை செயல்படுத்துவதற்கு சில காலம் பிடிக்கும். வளர்ந்த ஆடு, மாடு வழங்கப்படுமா, கன்றுக் குட்டி, ஆட்டுக் குட்டி வழங்கப்படுமா என்று இப்போதைக்கு கூற முடியாது. இத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றிய விரிவான அறிவிப்பு வரும் பட்ஜெட் உரையில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: