ஞாயிறு, 26 ஜூன், 2011

நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி

தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான ஆட்சிக் காலத்தில், கட்சிப் பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து கோடி கோடியாய் சம்பாதித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க., தலைமையிலான அரசு, அதிரடியாக நிலமதிப்பீடு தொகையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில், 2007ம் ஆண்டு முதல், அரசு நில மதிப்பீடு தொகை உயர்த்தப்படவில்லை. அரசுக்கு, பத்திரப் பதிவு மூலம் ஆண்டுதோறும், 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகளாக, நில மதிப்பீடு உயர்த்தப்படாததால், புதியதாக நிலம் வாங்குபவர்கள், அரசு நில மதிப்பீடு தொகைக்கு குறைவாக, நிலங்களை பத்திரப் பதிவு செய்து வந்தனர். அரசு நில மதிப்பீட்டை விட சந்தை நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், அரசு நில மதிப்பீடு தொகைக்கான, "ஸ்டாம்ப் டியூட்டி' மட்டும் கட்டி பத்திரப் பதிவு செய்வதால், மாநில அரசுக்கு வருவாய் பாதித்தது. தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, அந்த கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். அரசு நில மதிப்பீடு (கைட் லைன் வேல்யூ) தொகை உயர்த்துவதன் மூலம் அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, நில மதிப்பீடு தொகையை, வரும் சட்டசபை கூட்டத் தொடரில் அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பத்திரப்பதிவுத் துறை ஆணையர், ஒவ்வொரு மண்டலத்திலும், பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலர்கள் கூட்டம் நடத்தி, அரசு நில மதிப்பீடு தொகை குறித்தும், சந்தை மதிப்பு குறித்த தகவல்களை சேகரித்து, நில மதிப்பீடு தொகை உயர்த்துவது சம்பந்தமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருபவர்கள், நிலங்களை வளைத்துப் போட்டுள்ள தி.மு.க.,வினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலமதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டால், "ரியல் எஸ்டேட் தொழில்' முடங்கும் என, தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறி வருகின்றனர். சட்டசபை தேர்தலின் போது, "தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என ஜெயலலிதா சூளுரைத்தார்.

அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் ஜெ., அமர்ந்த நிலையில், சொந்த கட்சியினர் தவறு செய்தாலும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து, "சாட்டையை சுழட்டி' வருகிறார். தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலம் சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, உரியவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யுமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெ., அறிவுறுத்தியுள்ளார். இதனால், நிலங்களை அபகரித்து, பத்திரப் பதிவு செய்த தி.மு.க.,வினர் அச்சத்தில் உள்ளனர். முதல்வரின் அதிரடி நடவடிக்கைக்கு பயந்து, நில அபகரிப்பு புகாரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விளைநிலங்கள் விற்பனை தடுக்கப்படுமா? கேரளாவில், ஐந்தாண்டுகளுக்கு முன் விளைநிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அந்நிலங்களை வேறு பயன்பாட்டுக்காகவும், அரசு உட்பட எந்த நபரும் விற்கவோ, வாங்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற தடை உத்தரவு தமிழகத்திலும் பிறப்பித்தால்தான் உணவு உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். விவசாயிகளும் வளம் பெறுவர்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: