சனி, 25 ஜூன், 2011

இனப் படுகொலை: ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள் தண்டனை

டார் எஸ் சலாம்: இனப் படுகொலை மூலம் 8 லட்சம் அப்பாவி டுட்சி இன மக்களை கொன்று குவித்த ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ஐ.நா. சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (UN war crimes tribunal) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ருவாண்டா நாட்டின் முனனாள் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலின் நிராமாசுகுகோ (65). இவர் கடந்த 1994ம் ஆண்டு பதவியில் இருந்தபோது ருவாண்டாவின் தெற்கு புடார் மாகாணத்தில் டுட்சி இன மைனாரிட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 100 நாட்கள் நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அரசு ராணுவத்தினரை ஏவி 8 லட்சம் டுட்சி இன மக்களை இனப் படுகொலை செய்தது. இதில் முக்கிய பங்கு வகித்தார் பாலின்.

இவரது மகன் ஆர்சன் ஷலோமும் இதற்கு உடந்தையாக இருந்தார். எனவே போர் குற்றம் பாலின் மீது ஐ.நா. சபையின் சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகள் நடந்தது. பாலின் இனப் படுகொலை, மனித உயிர்களுக்கு எதிரான கிரிமினல் செயல்கள், கற்பழிப்புகள், அடக்குமுறை, மக்களின் கண்ணியத்தின் மீது அட்டூழியம், வன்முறை உள்பட 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பாலின் மீது கொடூர இனப் கொலை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகன் ஆர்சென் ஷலோமுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உலக வரலாற்றில் பெண் அமைச்சர் ஒருவருக்கு சர்வதேச நீதிமன்றம் இனப் படுகொலைக்காக ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: