திங்கள், 27 ஜூன், 2011

மகனை நினைத்து கண்ணீர் விட்டபடி தவிக்கும் கனிமொழி

டெல்லி: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது மகனைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாராம். மகனை நினைத்து வாடி வரும் அவர் அவ்வப்போது கதறி அழுது விடுகிறாராம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டது. அதுவரை சற்று மனம் தளராமல் தைரியத்துடனும், புன்னகையுடனும் காணப்பட்ட கனிமொழி தற்போது கவலை படர்ந்த முகத்துடன் காணப்படுகிறாராம்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்து விட்டதாலும், மகன் ஆதித்யாவைக் காண முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாலும், அவனை விட்டுப் பிரிந்து நீண்ட நாட்களாகி விட்டதாலும் பெரும் வருத்தத்திலும், துயரத்திலும் இருக்கிறாராம் கனிமொழி.

தனி செல்லில் தங்கியிருக்கும் கனிமொழி பெரும்பாலான நேரங்களை புத்தகம் படிப்பதிலும், எழுதுவதிலும் கழிக்கிறார். அவ்வப்போது கதறி அழுகிறாராம்.

அவரது முகம் சோகம் படர்ந்து காணப்படுவதாகவும், விரக்தியுடன் அவர் இருப்பதாகவும் சிறை வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அடிக்கடி அழுவதால் அவரது முகம் சோகமயமாக உள்ளதாக கூறும் அத்தகவல்கள், முன்பெல்லாம் அடிக்கடி பேசும் கனிமொழி தற்போது எப்போதாவதுதான் சக கைதிகள் அல்லது அதிகாரிகளுடன் பேசுகிறார். அப்படிப் பேசினாலும் தனது மகனைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார் என்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவின் நிலை பரவாயில்லை என்கிறார்கள். அவர் தனது சூழ்நிலையை நன்குஉணர்ந்து புரிந்து அதற்குப் பழகிக் கொண்டு விட்டார். இயல்பான நிலையில் அவர் காணப்படுகிறார். உடற்பயிற்சி, இந்தி கற்பது, சக கைதிகளுடன் இணைந்து விளையாடுவது என்று சகஜமான நிலையில் தன்னை வைத்துக் கொண்டுள்ளார். இதனால் மன இறுக்கம் இல்லாமல் இயல்பான நிலையில் இருக்கிறார். ஆனால் கனிமொழியால் சிறை சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் அவர் உடைந்து போய்க் காணப்படுகிறார்.

கனிமொழிக்கு டிவியும், கேபிள் இணைப்பும் தரப்பட்டுள்ளது. அதில் 28 சேனல்கள் வருகின்றனவாம். அவ்வப்போது டிவியைப் பார்த்து பொழுது போக்கி வருகிறாராம் கனிமொழி. பெரும்பாலும் செய்திகளையே பார்ப்பாராம்.

திஹார் சிறையில் தனது மகள் உடலில் கொப்புளம் வந்து அவதிப்படுவதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் கூறியிரு்நதார். ஆனால் திஹார் சிறை செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா இதுகுறித்து கூறுகையில், தேசிய மனித உரிமை ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை திஹார் சிறையின் சூழலை வெகுவாகப் பாராட்டியுள்ளன. சிறைக் கைதிகளின் அனைத்து அடிப்படைத் தேவைகள் குறித்தும் நாங்கள் பெரும் அக்கறை செலுத்தி வருகிறோம்.

எந்தக் கைதியாவது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடனடியாக உள்ளேயே உள்ள மருத்துவமனையை அணுகலாம். தேவைப்பட்டால் டாக்டர்கள் செல்லுக்கே நேரில் வந்தும் சிகிச்சை அளிப்பார்கள். இதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. தங்களுக்கு தேவையான மருந்துகளை கைதிகள் நேரடியாக டிஸ்பன்சரிக்குப் போய் வாங்கிக் கொள்ளவும் அனுமதி உள்ளது. கைதிகள் தங்களது மருத்துவத் தேவைகளை சிறைக் கண்காணிபப்பாளரிடம் தெரிவித்தால் அவர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கனிமொழி ஒரு விசாரணைக் கைதி. விசாரணைக் கைதிகளுக்கு திஹார் சிறையில் எந்தக் கைத்தொழிலும் கற்றுத் தரப்படுவதில்லை. எனவே கனிமொழி மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறார் என்று மீடியாக்களில் வந்த செய்தி தவறு என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/06/27/in-jail-kanimozhi-pines-son-reads-writes-aid0091.html

கருத்துகள் இல்லை: