புதன், 22 ஜூன், 2011

வட அயர்லாந்து அரசாங்கமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் சந்தித்துள்ளன !வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.
நா.த. அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், போர்குற்றங்கள் இனப்படுகொலை மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகாரத்துறை அமைச்சர் டிலக்சன் மொறிஸ் ஆகியோர் தலைமையில் சென்றடைந்துள்ள நா.த.அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினரை, அரச மரியாதையுடன் வட அயர்லாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை (யூன்21) வட அயர்லாந்து துணை முதலமைச்சர் Martin Mcguinness தலைமையிலான குழுவினருக்கும், நா.த.அரசாங்க குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. பாராளுமன்ற - துணை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 2மணி நேரம்வரை இடம்பெற்றது.
தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலை, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமை மறுப்பு, ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் ஆகிய விடயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாசையான தமிழீழக் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதனுடைய சனநாயக நடைமுறைச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துரைத்த அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய சனநாயகவழி போராடத்தின் உயர்பீடமாக அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, வெளிப்படையயை கிடைத்து வருகின்ற உலக நாடுகளின் அங்கீகாரமாகவே இதனைக் கருதுவதாக தெரிவித்தார். அமைச்சர் டிலக்சன் மொறிஸ் அவர்கள் கருத்துரைக்கையில், தமிழ் மக்களுடைய நிலைப்பாடு - நிலைவரம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டு வட அயலர்லாந்து அரச பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுவது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டதோடு, தமிழ் மக்களுடைய சனநாய பொறிமுறையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும் வரவேற்றுள்ளனர்.

வட அயர்லாந்து அரச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களுடனான தொடர் சந்திப்புக்களை நா.த.அரசாங்க உயர் மட்டக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: