புதன், 29 ஜூன், 2011

ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க எந்தத் தடையும், சிக்கலும் இல்லை- மன்மோகன் சிங்

டெல்லி: ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க எந்தத் தடையும், சிக்கலும் இல்லை என்று 'பொம்மை பிரதமர்' என்று எதிர்க்கட்சிகளால் வர்ணிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான பல்வேறு புகார்கள் சரமாரியாக வெடித்துக் கிளம்பி, பத்திரிகைகள் மூலமாக மக்களை வேகமாக சென்றடைந்து வரும் நிலையில் திடீரென பத்திரிக்கை ஆசிரியர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

அதன்படி ஐந்து பத்திரிக்கைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுடன் இன்று காலை 2 மணி நேரம் அவர் பேசினார்.

அப்போது பத்திரிக்கை ஆசிரியர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

ராகுல் காந்தி பிரதமராகலாம்

ராகுல் காந்தி பிரதமராகத் தகுதி படைத்தவராகி விட்டார் என்று திக்விஜய் சிங் உள்ளிட்ட ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் கூறி வருவது குறித்த கேள்விக்கு மன்மோகன் சிங் பதிலளிக்கையில், ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும், சிக்கலும் இல்லை என்று பதிலளித்தார் மன்மோகன் சிங்.

நான் பொம்மை பிரதமர் இல்லை

உங்களை பொம்மை பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறித்து அவரிடம் கேட்டபோது, இது எதிர்க்கட்சிகளின் புத்திசாலித்தனமான பிரசாரம். ஆனால் அதில் உண்மை இல்லை. சோனியா காந்தியின் கைப்பாவையாக நான் நிச்சயம் இல்லை. உண்மையில் அரசுக்கு சோனியா காந்தி மிகச் சிறந்த ஒத்துழைப்பை அளித்து வருகிறார். காங்கிரஸ் தலைவராகவும் அவர் சூப்பராக செயல்பட்டு வருகிறார் என்றார் பிரதமர்.

லோக்பாலில் பிரதமர் பதவியும் இடம் பெற வேண்டும்

லோக்பால் அமைப்பில் பிரதமர் பதவியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதுதான் எனது விருப்பமும் கூட. அதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

விரைவில் அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படு். எப்போது என்பது குறித்து இப்போது கூற முடியாதுஎன்றார் பிரதமர்.

திமுகவுடன் நல்லுறவு

திமுகவுடனான உரசல்கள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், திமுகவுடன் சில நேரங்களில் சிக்கலான சூழல் ஏற்பட்டது உண்மைதான். இருப்பினும் கூட்டணி நன்றாகவே உள்ளது என்றார் மன்மோகன் சிங்.

மீடியாக்கள் நீதிபதிகள் போல செயல்படுகின்றன

மீடியாக்களில் வரும் ஊழல் உள்ளிட்டவை குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், அரசு குறித்த விமர்சனங்கள், ஊழல் புகார்கள் உள்ளிட்டவை குறித்து மீடியாக்களே பகுத்தாய்ந்து, விசாரணை நடத்தி, தீர்ப்பையும் கூறி வருகின்றன. இது கவலை தருகிறது. உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை மீடியாக்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்றார்.

இலங்கைப் பிரச்சினையில் அவசரம் காட்ட முடியாது

இலங்கை பிரச்சினை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இலங்கை மட்டுமல்லாமல், பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நமது அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. அதில் அவசரம் காட்ட முடியாது. பொறுமையுடன்தான் எதையும் அணுக வேண்டியுள்ளது என்றார் பிரதமர்.

ராம்தேவ் விவகாரம்

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது ராம் லீலா மைதானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விமர்சிக்கப்படுவதில் அர்த்தமில்லை. அப்போது அதைத் தவிர வேறு வழி எங்கள் முன்பு இல்லை.

பிரணாப் அலுவலக உளவு பார்ப்பு

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்ட சர்ச்சை இப்போது முடிந்து போன ஒன்று.

http://thatstamil.oneindia.in/news/2011/06/29/no-problem-rahul-becoming-pm-says-manmohan-singh-aid0091.html

கருத்துகள் இல்லை: