சனி, 25 ஜூன், 2011

பள்ளி ஆசிரியை ஸ்கேலால் அடித்ததால் விபரீதம்: மாணவன் பார்வை கேள்விக்குறி!


சென்னை:வகுப்பில் குறும்பு செய்ததால் உடைந்த ஸ்கேலால் அடித்ததில், ஒன்பதாம் வகுப்பு மாணவன் வலது கண்ணில் படுகாயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்த பிறகே அம்மாணவனின் கண்பார்வையின் பாதிப்பு குறித்த விவரம்தெரியவரும்.

சென்னை, வெட்டுவாங்கேணி ஜான்சி தெருவைச் சேர்ந்தவர் மோகன். கொத்தனார். இவரது மனைவி மகாலட்சுமி; சித்தாள் பணியாளர். இவர்களது மகன் தீபக், 13.தீபக், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மதியம் தீபக் வகுப்பறையில் குறும்பு செய்ததாக தெரிகிறது. இதைக் கண்டித்த கம்ப்யூட்டர் ஆசிரியை உடைந்த ஸ்கேலால் அடித்ததில், தீபக்கின் வலது கண்ணில் பட்டு ரத்தம் வந்தது. முதலுதவி செய்த பின், தீபக்கை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.வீட்டிற்கு வந்த தீபக் முகத்தின் வலது பகுதி வீங்கியது. வலி தாங்காமல் அழுத அவனை, உடனடியாக நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீபக்கை பரிசோதித்த டாக்டர்கள் தீபக்கின் கிழிந்த வலது கண் இமைகளை சேர்ந்து தையல் போட்டனர். தையல் பிரித்த பிறகு, கண்ணின் தன்மை குறித்து ஸ்கேன் எடுத்து பார்த்த பின் தான் கூற முடியும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தீபக்கின் உறவினர்கள் கொடுத்த புகாரின்படி, நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


நீலாங்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிச்செல்வம் கூறுகையில்,"சம்பவம் குறித்து பள்ளியில் விசாரித்த போது, சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் கூறியுள்ளனர்' என்றார்.


தீபக்கின் தாய் மகாலட்சுமி கூறுகையில்," தீபக் கண்ணில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தரப்பில் சமாதான பேச்சுக்கு அழைத்துள்ளனர். இச்சம்பவத்தால் வரும் காலத்தில், என் மகனின் பார்வைக்கும், படிப்பிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதே என் விருப்பம்' என்றார்.சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, இதுகுறித்து கருத்து கூட மறுத்து விட்டார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: