திங்கள், 20 ஜூன், 2011

ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை

ஐக்கிய நாடுகள் அவை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்துவரும் உலக அகதிகள் தினம் இன்று. உள்நாட்டுப் போர், நாடுகளுக்கு இடையிலான போர், வறுமை, உயிர் பிழைக்க வேற்று மண்ணை நாட வேண்டிய நிலை என்று பல்வேறு காரணங்களால் வாழ்வைத் தேடவும், அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் - எதிர்காலத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு - இருப்பையும், பிழைப்பையும் தேடி நாடற்று அலையும் மக்களை ஐ.நா. பிரகடனம் அகதிகள் என்று கூறுகிறது.

எங்கிருந்து வந்தாலும், எந்நாட்டவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடுமின்றி, அவர்களுக்கு அகதிகள் என்ற நிலையை அளிப்பதன் மூலம், அவர்களையும் மானுட பற்றோடும், உரிமைகளோடும் அரவணைக்க வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஐ.நா.வில் 2000ஆவது ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஒப்புக்கொண்டு ஏற்ற தீர்மானம் எண் 55/76 படி இந்நாள் உலக அகதிகள் நாள் ஆனது.

ஆனால் இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஐ.நா.வின் அகதிகள் தொடர்பான பிரகடனம் கையெழுத்தாகி வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வைர கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எதுவும் இதுவரை இந்த பிரகடனத்திலோ அல்லது 1967ஆம் ஆண்டின் வரைமுறையிலோ கையெழுத்திடவில்லை.

ஆப்ரிக்காவில், தென் அமெரிக்காவில், ஆசியாவில் என்ற உலகின் மூன்றாவது உலக நாடுகள் அதிகமுள்ள 3 கண்டங்களில் உள்ள நாடுகளில்தான் போரில் இருந்து வறுமை வரையிலான பிரச்சனைகள் காரணமாக அகதிகள் பெருகியுள்ளனர். இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் அனைத்தும் தங்களை நோக்கி வரும் அகதிகளுக்கு - தன் நாட்டவருக்கு மட்டுமே உரிய வாக்குரிமை தவிர்த்து - ஐ.நா.வின் 1948ஆம் ஆண்டின் மனித உரிமைப் பிரகடனம் கூறும் அனைத்து உரிமைகளையும் அளித்து வருகின்றன. அகதிகளை பராமரிக்க ஆகும் செலவை உலக நாடுகள் தங்களுடைய பொருளாதார பலத்திற்கு ஏற்ற வகையில் ஐ.நா.வின் அகதிகள் பராமரிப்பு நிதிக்கு வாரி வழங்கி காப்பாற்றி வருகின்றன.

அகதிகளை பராமரிக்க ஐ.நா. அகதிகள் உயர் ஆணையர் எனும் பெரும் பொறுப்பு உள்ளது. அது அகதிகளை காப்பாற்ற ஆகும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. அதே நேரத்தில் அகதிகள் வருவதற்கான அரசியல், பொருளாதாரக் காரணிகளுக்குத் தீர்வு கண்டு, அகதிகள் என்ற நிலை நிரந்தரமாகாமல் காத்து வருகிறது ஐ.நா.வின் மனித உரிமை உயர் ஆணையர் அமைப்பு.

ஐ.நா.வின் அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அனைத்தும், அந்தப் பிரகடனத்திற்கு இணங்க தங்கள் நாட்டில் அகதிகள் சட்டமியற்றி உள்ளன. ஆனால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அப்படிப்பட்ட சட்டங்கள் ஏதுமில்லை. எனவே அகதிகளை பராமரிப்பதில் அவைகளின் தன்னிச்சையான செயல்பாட்டின் மீது எந்த வினாவையும் எழுப்ப முடியாத ஒரு நிலையை வைத்திருக்கின்றன.

அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திடாத இந்த நாடுகள் ஐ.நா. அகதிகள் ஆணையம் செயல்பட அனுமதிக்கின்றன. ஆனால், இந்த நாடுகளின் வசதிக்கேற்பவே ஐ.நா.அகதிகள் ஆணையம் செயல்பட வேண்டும். இல்லையெனில் அகதிகள் ஆணையத்தின் செயல்பாட்டை - எப்படி இலங்கையில் ஐ.நா. அமைப்புகளை வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டதோ அதுபோல் - நிறுத்திவிடுமாறு இந்நாடுகள் கூறிவிடலாம்.

இந்த நிலைதான் உன்னதமான அகதிகள் பிரகடனத்தின்படி, அனைத்து அகதிகளையும் சம அளவில் பாரமரிக்க இயலாத நிலைக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் தள்ளப்படுகிறது.

இதற்கு சரியான எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டிலேயே ஈழத் தமிழ் அகதிகள் இதுநாள்வரை நடத்தப்பட்டதைக் கூறலாம். இப்போது ஆட்சி மாறிவிட்ட நிலையில், இலங்கை அகதிகள் அனைவரும் கெளரவமான வாழ்வையும், நிலையான குடியிருப்பு வசதிகளையும், தூய குடிநீர், வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு ஆகியன பெறுவர் என்று அறிவித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து நல திட்டங்களும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு அறிவித்தது.

அத்தோடு நிற்கவில்லை, கடந்த 7ஆம் தேதி அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது. ஈழ அகதிகளுக்கு எந்தெந்தத் துறை என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்ட உத்தரவை (மறுவாழ்வுத் துறை எண் 480) தமிழக அரசு பிறப்பித்தது.

ஆனால், கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக அவர்களின் வாழ்வு துயரமானதாகவும், அவலமானதாகவும் தாய்‌த் தமிழ் மண்ணிலேயே இருந்தது என்பதை மறக்கவியலாது. இதற்குக் காரணம் அவர்களுக்கு உதவ ஐ.நா.அகதிகள் ஆணையம் முன்வந்தாலும், இந்திய அரசு அனுமதிக்காததாலும், டெல்லி அரசின் வழியிலேயே மாநில அரசுகள் நடந்துக்கொண்டதாலும் அவர்கள் நிலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்தது. இப்போதுதான் அந்த நிலை மாறியுள்ளது.

ஈழத் தமிழ் அகதிகளை இப்படி வதைத்த டெல்லி அரசு, திபெத் அகதிகளுக்கு தனி நகரத்தையே ஒதுக்கி அவர்கள் இந்தியாவின் எந்த இடத்திற்கும் சென்று தொழில், வணிகம் செய்யவும், கல்வி கற்கவும் துணை புரிந்தது. இப்படியொரு நிலை இன்றளவும் தொடரக் காரணம் ஐ.நா. பிரகடனங்கள் தொடர்பாக படித்த மக்களிடையே கூட நிலவும் அறியாமையே.

பட்டம் பெற்ற, வாழ்க்கை அனுபவம் அதிகம் பெற்றவர்கள் கூட, ஐ.நா.வின் மனித உரிமை பிரகடனம் பற்றியோ, அகதிகள் பிரகடனம் பற்றியோ ஒன்றும் தெரியாதவர்களாக உள்ளனர். நம் உரிமைக‌ள் தொடர்பான சட்டங்கள் தொடர்பாக எப்படிப்பட்ட அறியாமை நிலவுகிறதோ அதே நிலை மனித உரிமை தொடர்பான பிரகடனங்கள் குறித்தும் நிலவுகிறது. இந்த அறியாமையே நமது அரசுகள் அப்பாவி மக்கள் மீது ஆயுத ரீதியாக மேற்கொள்ளும் பல அத்துமீறல்களுக்கு அடிப்படையாகிறது.

இன்றும் கூட, தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில், ஐயத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறையில் வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 40 பேர் வரை உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் தங்கள் மீது வழக்கென்று ஏதுமில்லாத நிலையில், ஏன் தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று கேட்கின்றனர். தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி கடந்த சில நாட்களாக 4 ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் இரண்டு பேர் உடல் நிலை மோசமுற்று அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உடல் மோசமுற்று சிகிச்சையில் இருக்கும் நிலையிலும் அவர்களில் ஒருவரை கையிலும், காலிலும் விலங்கிட்டு வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன! என்ன வினோதம் இது, ஒரு ஜனநாயக நாட்டில் அகதியாய் வந்தவரை - வழக்கென்று ஏதுமற்ற நிலையில் சிறையில் வைத்தது மட்டுமின்றி, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும் விலங்கிட்டு வைப்பது எப்படிப்பட்ட மனித உரிமை மீறல்?

மனிதாபிமானத்தை நிலைநிறுத்தும் ஐ.நா.வின் பிரகடனம், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் கேலிக்கூத்தாகிறது.

மனசாட்சியற்ற ஜனநாயகம்.


http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: