புதன், 8 ஜூன், 2011

கருணாநிதிக்கு மக்கள் கொடுத்த கட்டாய ஓய்வு:பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்

"கருணாநிதிக்கு மக்கள் கொடுத்திருப்பது விருப்ப ஓய்வு கிடையாது; கட்டாய ஓய்வு. அதனால் தான், அவரது கட்சி எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது,'' என, அ.தி.மு.க., உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.


சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:முந்தைய ஆட்சியில், முதல்வரின் குடும்ப வாரிசுகள் எனக்கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கேற்று, தமிழகத்தை சீர்குலைத்தனர். 14வது சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி வர வேண்டும் என்பதற்காக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கினர். 2006ல், மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்காததால், அ.தி.மு.க., ஆட்சி அமையாமல், மைனாரிட்டி அரசு அமைந்தது.குடும்ப ஆதிக்கம், அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல்கள், அன்றைய அமைச்சர்கள் மீதே பல்வேறு வழக்குகள், கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா, கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை, மணல் திருட்டு, கற்பழிப்பு என, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்தது.சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடந்த மோதலில், எந்த மாநிலத்திலும் நடக்காத அசம்பாவிதங்கள் நடந்தன. ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் அராஜகங்கள் நடந்தன.தா.கிருஷ்ணன் கொலை வழக்கில், மேல் முறையீடு செய்து, குற்றவாளிகள் தண்டனை பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில், முறையாக பண வினியோகம் செய்திருப்பதாலும், இலவச திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை என்பதாலும், தேர்தலில் வெற்றி உறுதி என, முந்தைய ஆட்சியாளர்கள் அகம்பாவத்துடன் பேசினர்.


தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் பார்முலா, மற்ற மாநிலங்களில் அந்தந்த ஆளுங்கட்சியினரால் அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், ஓட்டுகள் விலைக்கு வாங்கும் அவலம் இந்தியா முழுவதும் நடந்தால், அதன் தொடர் விளைவு எப்படியிருக்கும் என, அனைவரும் யோசிக்க வேண்டும்.


அப்படி நடந்தால், நாட்டின் ஜனநாயகம், காஷ்மீரைப்போல், அசாமைப்போல் சீர்குலைந்திருக்கும். நாட்டின் இறையாண்மையே கேள்விக்குறியாகி இருக்கும். அதன்பின், லட்சக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து, அதில் சில ஆயிரம் கோடிகளை வாக்காளர்களுக்கு இலவசமாக கொடுத்து, ஐந்தாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை குத்தகைக்கு எடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும். அப்படி எதுவும் நடக்காமல், தமிழக மக்கள் ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளனர்.தேர்தல் தோல்வி குறித்து கூறும்போது, "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்' என, கருணாநிதி கூறியுள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்டது விருப்ப ஓய்வு அல்ல; கட்டாய ஓய்வு. அதனால் தான், எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல் அவரும், அவருடைய கட்சியும் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.


இந்த தேர்தல் முடிவு, குடும்ப ஆட்சிக்கு, நிர்வாக சீர்கேட்டிற்கு, அராஜகத்திற்கு, அநியாயத்திற்கு, அடுத்தவர் சொத்தை அபகரித்த அக்கிரமத்திற்கு மக்கள் மரண அடி கொடுத்திருக்கின்றனர். 2011க்குப் பின், அ.தி.மு.க., என்ற கட்சியே இருக்காது என்று, மதுரையில் இருந்தபடி எள்ளி நகையாடினார் ஒருவர். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சிக்கே இந்த நிலையா என்று நீலிக் கண்ணீர் வடித்த அந்த வீராதி வீரர், சூராதி சூரர் இப்போது எங்கே?இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

http://www.dinamalar.com


கருத்துகள் இல்லை: